நோர்வே – இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு வருகின்றார். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்தடவையாகும். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல தரப்பினருடன் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சரை உத்தியோகப்பூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 10.25 மணிக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. வரவேற்பைத் தொடர்ந்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோருடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் பேச்சு நடத்தவுள்ளார்.
இன்று மாலை 5.30 மணிக்கு வர்த்தக மாநாடு ஒன்றிலும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்டும் அமைதி முயற்சிகளில் நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே, அந்த முயற்சியில் தோல்வியடைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையுடன் அரசியல் உறவுகளைப் புதுப்பிக்கவுள்ளது என்று ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது