தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல், வினைத்திறன் மிக்க மாகாண நிர்வாகம் இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. என முதல்வரிடம் தெரிவித்தனர் வட மாகாணசபை உறுப்பினர்கள். வட மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும், வட மாகாணசபையின் முதலமைச்சர் கௌரவ.நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று [11-01-2016] முற்பகல் 10:00 மணிமுதல் முதலமைச்சர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வட மாகாணசபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்களின் கூட்டான வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சர் அவர்கள் இந்த சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கித்தந்திருந்தார். மேற்படி சந்திப்பில் 18 ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உறுப்பினர்கள் தமது சந்திப்பின் நோக்கம் குறித்து விபரிக்கையில் வடக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பு என்ற அந்தஸ்த்தை வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை சுமந்த எமக்கு வழங்கியுள்ளார்கள். இதன் மூலம் எமக்கு வாக்களித்த மக்களுக்கு இரண்டு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஒன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையாகிய இன முரண்பாட்டுக்கு அரசியல் ரீதியான தீர்வுக்கான ஆணையை வழங்குதல். மற்றயது கிடைக்கக்கூடிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அபிவிருத்தியும். இந்த விடயங்களில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினராகிய நாம் கடந்த இரண்டு வருடங்களில் எதனைச் சாதித்திருக்கிறோம் என்பதை கடந்த 2015 நவம்பர் மாதம் 05ம் நாள் எமக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாம் விரிவாக ஆராய்ந்தோம்.
அதனைத்தொடர்ந்து 2015 நவம்பர் 19ம் திகதி முதலமைச்சருடன் அது குறித்து ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினோம். எமக்கான இரண்டாவது சந்திப்பு 17-12-2015 அன்று ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும் பாதீடு தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றமையால் எம்மால் குறித்த சந்திப்பை நடத்த முடியவில்லை, அதன் தொடரா்ச்சியாக இன்று எமது இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் இரண்டு முக்கிய தலைப்புக்களில் எமது கலந்துரையாடலை நடத்தினோம். 1. வினைத்திறன் மிக்க மாகாண நிர்வாகம். 2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல்.
மேற்படி இரண்டு விடயங்கள் தொடர்பிலும் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். மாகாண நிர்வாக விடயங்கள், மக்கள் நலன் சார் திட்ட அமுலாக்கம், திட்டமிடல் போன்ற பல விடயங்கள் ஆளும்கட்சி உறுப்பினராகிய எமது அறிவுக்கு எட்டாமலே இடம்பெறுகின்றன, அத்தோடு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நிதி ஒதுக்கீட்டின் போதாமை, உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை சார்ந்த விடயங்கள் பற்றி முக்கியமாகப் பேசப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல் என்ற விடயத்தில்; மக்கள் எம்மைத் தனிநபர்களாக அடையாளம் கண்டு எமக்கு வாக்களிக்கவில்லை.
மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பொது அடையாளத்தின் அடிப்படையில்தான் வாக்களித்தார்கள். எம்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொருத்தமான வேட்பாளர்களாக மக்கள் முன் அறிமுகப்படுத்தியது. எனவே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்துக்காகவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம். 2001ம் ஆண்டு முதல் மக்கள் தமது ஆணையை தொடர்ச்சியாகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக 2010ம் ஆண்டுக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தீர்வுத்திட்ட அடிப்படைகளுக்கு மக்கள் பெரும்பான்மையாக தமது ஆணையை வழங்கி வந்திருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் 2016ம் ஆண்டினை தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான ஆண்டாக அடையாளப் படுத்தியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் நோக்கிய நகர்வுக்கான ஆண்டாக இதனை நாம் கருதுகின்றோம். அதற்கு சாதகமான சந்தர்ப்பம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் காணப்படுகின்றது. எனவே இவ்வாறானதொரு முக்கியமான சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணசபையின் ஆளும் தரப்பினராகிய நாம் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பொது அடையாளத்தின் கிழ் ஒரேகுரலில் பேசுவதனை உறுதி செய்யும் வகையில் செயற்படவேண்டும் என்பது உறுப்பினர்களுடைய ஏகோபித்த வேண்டுகோளாக இருந்தது.
இதற்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ”இங்கே முக்கியமான பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன, அவை குறித்து நான் குறிப்புகளை எடுத்திருக்கின்றேன், இந்நிகழ்வின் ஆரம்பத்தில் நான் முன்வைத்த ஒரு சில விடயங்கள் மாகாணசபையின் செயற்பாடுகளில் காணப்படும் ஒரு சில குறைபாடுகளுக்கான தீர்வுகளாக இருக்கும். இன்னும் பல விடயங்கள் குறித்துப் பேசவேண்டியிருக்கின்றது. அத்தகைய விடயங்கள் குறித்து விரிவான ஒரு கலந்துரையாடலை எதிர்வரும் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை நடாத்துவோம், அதன்போது மிக முக்கியமான தீர்மானங்களைப் பெறக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்ததோடு சந்திப்பு நிறைவடைந்தது.