எனது “பத்தும் பலதும் முற்றும் உண்மை” என்ற கட்டுரையில் முதல்வரின் செயல் மீதான எனது விசனத்தை எழுதி அவர் தமிழ் மக்கள் பேரவையின் தலைமை ஏற்று அடுத்தவர் சுயநல விருப்புக்கு துணை போவதை விமர்சித்தேன். அவருக்கு முன்பு அரணாக இருந்தவர்களே அவரின் இந்த செயல் கண்டு விசனம் அடைந்துள்ளதாக எழுதினேன். ஆனால் அண்மையில் மாகாண சபை உறுப்பினர்கள் முதல்வருடன் நடத்திய சந்திப்பின் பின்பு அவர்கள் முதல்வர் மீது விசனம் கொள்ளவில்லை அவர் நிலைகண்டு வேதனைப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது.
நீண்ட காலம் தெற்கில் வாழ்ந்த நான் கடந்த இரண்டு வருடங்கள் தான் வடக்கில் நிரந்தரமாக வாழ்ந்து மக்களின் நாளாந்த பிரச்சனைகளை அறிந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தினம் தினம் சிந்திக்கிறேன் என புதிய ஆயரை வாழ்த்தும் நிகழ்வில் மனம் திறந்து பேசிய முதல்வரின் பேச்சு என் நெஞ்சில் சுருக் என குத்தியது. வெள்ளாந்தியான ஒருவரை தங்களின் சுயநல சூழ்ச்சிக்காக அவரை சுற்றி இருப்பவர் தம் வஞ்சகபுகழ்ச்சி மூலம் வீழ்த்தி விட்டனர் என்பது இப்போது எனக்கு புரிகிறது. நான் தேடி சந்தித்த எந்த ஒரு மாகாண சபை உறுப்பினரும் அவரை தாழ்த்திப்பேச முயலவில்லை.
இளையவர் எல்லாம் அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்தும் வயதினர் எல்லாம் மரியாதை தந்தும் தான் அவர் பற்றிய தங்கள் மனவேதனையை என்னுடன் பகிர்ந்தனர். பேரவை பிரதி தலைவர் முன்பு முதல்வர் பற்றி கூறியதை நினைவு படுத்திய ஒரு உறுப்பினர் கூறியது இது. “அவரை நான் முன்னொரு போதும் சந்தித்தது இல்லை. அவர் வகித்த பதவி பற்றியும் அறியேன். ஆனால் அவரை முதல் முதல் நேரில் பார்த்ததும் இரு கரம் கூப்பி வணங்கவேண்டிய பெருமகன் இவர் என என் உள்மனம் சொன்னது” என கூறிய அந்த முன்நாள் கல்வி அதிகாரி கூறியது போல் போற்றுதலுக்கு உரியவராய் இருந்த முதல்வரா பாதை மாறுவார்?
இல்லை இல்லவே இல்லை. நெஞ்சினில் நஞ்சை வைத்து நாவினில் அன்புரைத்து நல்லவர் போல் நடித்த வஞ்சகர் தம் வலையில் அவரை சிக்கவைத்து தாம் பதவி சுகம் காண செய்யும் சூழ்ச்சிக்கு அவரை பலிக்கடா ஆக்க பார்க்கின்றனர் என கூறினர். அரசியலுக்கு புதியவரான முதல்வர் அது ஒரு சகுனிகள் ஆடும் சூதாட்டகளம் என இன்னமும் அறியாமல் தன் இளகிய மனதில் எழும் உணர்ச்சிப்படி முடிவுகள் எடுக்க அவரை தூண்டி தாம் நினைத்ததை முடிக்க அவரை பகடைக்காயாக பாவிக்க விசமிகள் விரும்புகின்றனர். வேண்டுமென்றே அவர் தன்மானத்தை தூண்டும் விதத்தில் தேவையற்ற புரளிகளை கிளப்பி விடுகின்றனர்.
அப்படியான ஒன்றுதான் அண்மையில் தன் மனவிருப்பை செய்தியாக்கி பத்திரிகையாளர் முன்னிலையல் அவிழ்த்து விட்டுள்ளார் சுரேஸ் பிரேம சந்திரன். முதல்வருக்கு எதிராய் முக்கிய கட்சியின் தலைமை நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர எத்தனிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரம் ஊடாக தான் அறிவதாக கூறினார் சுரேஸ். அது தனது தேர்தல் தோல்வி மற்றும் சுமந்திரனின் வெற்றியை ஜீரணிக்க முடியாத சுரேசின் உள்நோக்கம் கொண்ட செய்தி அன்றி அதில் உண்மையேதும் இல்லை என்பதை அறியாமல் எங்கள் முதல்வரும் அதை நம்பிவிட்டார் போலும் என வேதனைப்பட்டனர்.
ஜீ ஜீ பொன்னம்பலம் இடைக்காலத்தில் தவறான முடிவு எடுத்தபோதும் இறுதிக்காலத்தில் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர் வீட்டு படியேறி ஒற்றுமை பற்றி பேசிய உடன் இருகரம் பற்றி கூட்டணி கண்டது போலவே ஆரம்பத்தில் புலிகளின் செயலை விமர்சித்த குமார் பொன்னம்பலம் கூட இறுதியில் சந்திரிகாவின் சமாதான யுத்தம் ஏற்படுத்திய குடாநாட்டு இடப்பெயர்வு உட்பட செம்மணி படுகொலை வரை நடந்தவை நெஞ்சை உறுத்த “சிங்கத்தின் கோட்டைக்குள் இருந்து கொண்டு குரல் கொடுத்த மாமனிதர்” என பிரபாகரன் போற்றும் புகழ் நிலைக்கு ஏகினார். ஆனால் அவர் மகன் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஏன் இந்த பிரிவினை பேரவையில் முதல்வரை மாட்டிவிட்டார் என ஆத்திரப்பட்டனர்.
பாண்டவர் பங்கைக் கேட்க தூது போன கிருஸ்ணனே ஆளுக்கொரு வீடாவது கொடு என கேட்டும் கிடைக்காமல் குருசேத்திரம் தான் முடிவு என இறுதியில் தீர்மானம் எடுத்தே தன் வலம்புரி சங்கை ஊதி யுத்தத்தை ஆரம்பித்தான் என்பதே மகா பாரத பதிவு. உரிமை மறுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்திய இளைஞர் இறுதியில் சர்வதேச சதியில் சிக்கி மாண்டு போயினர். அந்த கந்தக புகை நாற்றம் ஐநா வரை சென்றதால் பான்கி மூன் உட்பட நவநீதம்பிள்ளை அவர் பின் ஹசீம் வரை தீர்வு பற்றி ஆலோசனை வழங்கும் வேளையில் இவர்கள் குருப் பிரம்மா குரு விஸ்ணு குரு தேவோ மகேஸ்வரா என குரு போற்றும் முதல்வரை ருத்ர தாண்டவதுத்துக்கு தூண்டுகின்றனர் என வேதனைப்பட்டனர்.
குருவின் பார்வை கோடி நன்மை தரும். அதனால் தான் முதல்வர் ஐயா எப்போதும் குருப்பிரம்மா சுலோகம் சொல்லியே பேச்சை ஆரம்பிப்பார். அவரை வைத்து ருத்திர தாண்டவம் ஆட வைப்பவர் அடைய நினைப்பது என்ன? ருத்திர தாண்டவத்தை ஊழித்தாண்டவம் என பொருள் கொள்ளலாம். அழிவின் ஆட்டம் இன இலகு தமிழில் கூறலாம். முள்ளிவாய்க்காலில் எம்மவருக்கு நடந்தது போல் என உதாரணம் காட்டலாம். ஆழிப்பேரலை அள்ளி சென்றதை விட மோசமான அழிவை தந்த அந்த நிகழ்வை அனுபவித்த மக்களை தினம் தினம் சந்தித்து வினை தீர்க்க முயலும் எங்கள் முதல்வரை தம் சுயநலத்துக்காக சிலுவையில் ஏற்றத்தான் இந்த விசமிகள் முயல்கிறனர் என உண்மை நிலையை எனக்கு புரியவைத்தனர்.
எவ்வாறான தீர்வு என்ற கேள்விக்கு இருப்பதையும் இழக்காத தீர்வு ஏற்புடையது என பாரத கண்ணனே தன் தூது மூலம் கூறியது எமக்கு ஒரு பாடமாக வேண்டும். அரக்கு மாளிகையில் தீக்கு இரையாகாமல் தப்பிய பின்பு அஞ்ஞானவாசம் முடித்து வந்தவருக்காக புருசோத்தமனே கேட்டது புவியில் நிம்மதியாய் வாழ ஆளுக்கொரு வீடாவது கொடு எனும்போது, ஒரு பத்திரிகை மீண்டும் ஏன் வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றி சங்கநாதம் எழுப்புகிறது. வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வாக்களித்த மக்கள் தான் அன்று மாவட்ட சபைக்கும் வாக்களித்தனர். இன்று வடமாகாண சபைக்கும் மட்டுமல்ல இறுதி தேர்தலில் பிரிவினை பேசியவரையும் நிராகரித்தனர். அந்த மக்கள் மனநிலையை உணர அதன் ஆசிரியர் ஏன் மறுக்கிறார் என ஆதங்கப்பட்டனர்.
இத்தனை தெளிவாக அவர்கள் முதல்வர் பற்றிய முடிவில் இருக்கையில் எப்படி அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீமானம் கொண்டுவரும் செய்தி வந்தது? வடக்கின் எந்த ஒரு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ முதல்வரை இகளும் மனநிலையில் இல்லை. அவரின் ஒரு சில நடவடிக்கை பற்றி எழுந்த விமர்சனம் விசமிகளால் விஸ்வரூபமாக்கப்பட்டு அவரின் பிரபலத்தில் தாங்கள் பதவிகளை மீளப்பெற துடிப்பவரின் செயல் இது என்பது இப்போது புரிகிறது. முதலில் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி அந்த வலையில் முதல்வரை சிக்க வைத்தனர்.
பின் அவரின் தன்மானத்தை தூண்டும் செயலை அவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயல்கின்றனர் என்ற வதந்தியை பரப்புவதன் மூலம் செய்தனர். அந்த வதந்தியை செய்தியாக்கிய சுரேஸ் தான் முன்பு முதல்வராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுவதை மூர்க்கமாக எதிர்த்தவர். அவரே இன்று முதல்வருக்கு அரணாக மாறுவதுபோல் தன் சுய விருப்பை நிறைவேற்ற முதல்வருக்கு எதிராக சதி நடப்பது போலவும் அதை செய்வது கூட்டமைப்பில் இருக்கும் பிரதான கட்சியின் முக்கிய பிரமுகர் என மறைமுகமாக சுமந்திரனை கோடிட்டுகாட்டி முதல்வரின் தன்மானத்தை தூண்டுகிறார்.
முதல்வருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் உள்ளது குரு சிஸ்ய கருத்து வேறுபாடு. விளக்கம் கிடைத்ததும் வேறுபாடு நீங்கிவிடும் என்பது என் நிலைப்பாடு. ஆனால் சுரேஸ் கிளப்பி விடுவது அவரது தன்மானத்தை. சூதாட வருமாறு அழைத்த போது தருமன் மறுத்தான். சகுனி விடவில்லை. தருமனின் தன்மானத்தை தூண்டும் விதமாக அவனிடம் எந்த ஒரு ஆட்டத்திலும் ஒருவன் வெல்வது அல்லது தோற்பது தான் நிஜம். உனக்கு தைரியம் இருந்தால் ஆடு ஒன்றில் நீ வெல்வாய் அல்லது நான் வெல்வேன் என தருமனின் தன்மானத்தை தூண்டியதால் தான் சூதாட்டம் நடந்தது.
உங்களை அகௌரவப்படுத்த போகின்றனர் என்ற செய்தியை சுரேஸ் பத்திரிகையாளர் மூலம் முதல்வர் காதுக்கு எட்டச்செய்துள்ளார். சிவனே என்று இருந்த என்னை கூட்டிவந்து மேடையேற்றி முதல்வராக்கியவரே தன்னை அகௌரவப்படுத்துவதை ஏற்க முதல்வரின் தன்மானம் இடம் கொடுக்குமா? அவர் வேண்டி விரும்பி வந்தவரல்ல. பலர் அழைத்தும் மறுத்தவர் இறுதியில் தன்னால் ஆகவேண்டிய காரியம் இது என்பது இறைவன் சித்தம் போலும் என்ற மனப்போக்கில்தான் வந்தார் என அவருக்கு நெருக்கமானவர் கூறினர். அப்படிபட்ட ஒருவரை எப்படி நாம் அகௌரவப்படுத்துவோம் என் அந்த உறுப்பினர்கள் ஆதங்கப்பட்டனர்.
என் அறிவுக்கு எட்டியவரையும் நான் அறிந்து கொண்டவரையும் என்னால் தெளிவாக கூற கூடிய விடயம் ஒன்றுதான். முதல்வர் தனது உறுப்பினர்களுடன் மனம்விட்டு பேசி அவர்களின் உளக்கிடக்கைகளை உணர்ந்து கொள்ளவேண்டும். தன் நிலைப்பாடு என்ன என்பதையும் அவர் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அண்மையில் நடந்த ஒன்றுகூடல் போல் மேலும் மேலும் சந்திப்புகள் இடம்பெற வேண்டும்.
முதல்வருக்கு உள்ள வேலைப்பளுவால் தவிர்க்கப்படும் சந்திப்புகளை தமக்கு சாதகமாக்கி சங்கை ஊதுபவர் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மீண்டும் தன்மீதான நம்பிக்கையை கூட்டமைப்பை சார்ந்த உறுப்பினர்கள் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை முதல்வர் ஏற்படுத்த வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுப்பப்படும் வதந்திகளுக்கும் சுயநலமிகளால் கிளப்பி விடப்படும் புரளிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தெற்கின் அத்தனை கட்சிகளையும் துண்டாடிய மகிந்தவால் கூட்டமைப்பை சீண்ட முடியவில்லை என்பதை நினைவில்கொண்டு செயல்படவேண்டும். தந்தைக்கு ஒப்பான அவர் நல்ல மேய்ப்பனாக இளையவர்களை வழிநடத்தி பாதீனியம் போல் எம் மண்ணில் சுயநல விசமிகளால் விதைக்கப்படும் வதந்திகளை முளையிலே கிள்ளி எறிந்து தன்மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை முதைல்வர் உறுப்பினர்களுக்கு வழங்கவேண்டும்.
(மாதவன் சஞ்சயன்)