(சாகரன்)
ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு சர்தேச அளவில் ஆயுதப் பயிற்சி(லெபனான் பயிற்சி எனக் கூறுவர்) வழங்கியதில் பாலஸ்தீன மக்களிடையே உள்ள விடுதலை அமைப்பின் இடதுசாரிச் செயற்பாடாளர்கள் PLFP அமைப்பினரே முதன்மை பெறுகின்றனர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஒரு குடை அமைப்பின் கீழ் இவ் அமைப்பு இருந்திருந்தாலும் தனது சித்தாத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணிக்குள் தமது கருத்துக்களுக்கான உள்ளக அமைப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியே வந்திருக்கின்றனர். சகோதரப் படுகொலை பாரியளவில் நடைபெறாத விடுதலைப் போராட்டத்தை கொண்டிருந்த இந்த மக்களின் போரட்டப்பாதையில் ஹமாஸ் சில தடவைகள் சகோதரப் படுகொலையில் ஈடுபட்ட காலங்களிலும் இதனைத் தவிர்ப்பதில் இந்த PLFP கணிசமான வெற்றிகளை கண்டே வந்திருக்கின்றது.
பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட ஐநா மத்தியஸ்தத்துடன் நடைபெற்று ஏற்பட்ட ‘அரசியல் தீர்வு?” ஒப்பந்தத்தை(Oslo Accords)யும் இதனைத் தொடர்ந்து எற்பட்ட யாசீர் அரபாத் தலமையிலான பாலஸ்தீன அரசுச் செயற்பாட்டையும் PLFP ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது தொடர்ந்தும் தனது அரசியல் கொள்கை ரீதியிலான போராட்டதை செய்தே வருகின்றது. இந்த அமைப்பைத் தவிர ஏனைய அமைப்புக்கள் இடதுசாரி சிந்தனைக்குள் உள்ளாகாத அமைப்புக்கள் என்பதினால் வலதுசாரி மேற்கத்திய நாடுகளும் இதனை பலவீனமடையச் செய்வதில் தனியான ஒரு வேலைத் திட்டத்தைக் தமக்குள் வகுத்து செயற்பட்டு இவ் அமைப்பை பலவீனமடையச் செய்திருக்கின்றன.
ஆனாலும்……. இப்போதும் இவ் அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் லைலா காலித், முதலாவது பாலஸ்தீன பெண் போராளி. லைலா காலித் போன்ற தலைவர்கள், டமாஸ்கஸ்ஸில் இருந்தார்கள். தற்போது அங்கே நடக்கும் யுத்தத்தின் பின்னரும் அங்கேயே இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. பாலஸ்தீன பகுதிகளான, மேற்குக் கரையிலும், காசாவிலும் இப்போதும் PLFP உறுப்பினர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக இளம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ஹமாஸ், பதாவுடன் ஒப்பிடும் பொழுது, உறுப்பினர் எண்ணிக்கையும், செயற்பாடுகளும் மிகக் குறைவு. அண்மைக்காலத்தில் இராணுவ நடவடிக்கைகள் எதிலும் இறங்கவில்லை.
பொதுவான அரசியல் நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டவர்களுக்கான சட்ட ஆலோசனைகள், யூத இடதுசாரி அமைப்புடன் சேர்ந்து வீடியோ பிரச்சாரம் செய்வது, இவற்றை தவிர குறிப்பிடத் தக்க எந்த செயற்பாடும் இல்லை. இதே மாதிரியான செயற்பாட்டை நாங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்திலும் காண முடியும்.