புதிய அரசியலமைப்பின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இது ஆரம்பம் என்பதால், முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விவகாரத்தையிட்டு, முன்வைத்த காலை அரசாங்கம் பின்வைக்கக்கூடாது. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரிசனையை, பிற்போக்குவாதிகள் தங்களுக்குச் சாதகமாக்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கோரியுள்ளது.
‘புதிய அரசியலமைப்புக்கான பிரேரணையில் சொல்லப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றி, அடுத்தடுத்த கட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன், அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். அவ்வாறான செயற்பாடுகளுக்கு, முட்டுக்கட்டையாக நாங்கள் இருக்கமாட்டோம்’ என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
‘புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவது பற்றிப் பேசி வருகின்ற நிலையில், கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து முன்னேற வேண்டுமாக இருந்தால், குடியரசின் 3ஆவது அரசியலமைப்புச் சட்டம், மிகவும் முக்கியமானது. அதுதான், இனங்களுக்கிடையிலான உறவு சம்பந்தமான புதிய முறைமையை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதாக இருக்கும்.
நாடாளுமன்றத்தில், ஜனவரி 09ஆம் திகதியன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபாலவும் ஆமோதித்து உரையாற்றிய இந்தப் பிரேரணையானது, ஓர் அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கான பொறிமுறையை மாத்திரமே அறிமுகப்படுத்துகின்றது.
சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி, கரிசனையாக இருக்கிறார் என்ற காரணத்தினாலேயே, இந்தப் பிரேரணை மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.
எனவே, நல்லதொரு செயலுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வைத்துள்ள காலை பின்வைக்காமல், முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அரசாங்கத்தின் செயல்முறைக்கு நாம், ஆக்கபூர்வமான ஆதரவை வழங்கி வருகின்றோம். இதற்கு, தமிழ் மக்களும் முதல் முறையாக, தமது ஆதரவை வழங்கியுள்ளனர். எனவே, புதிய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் அடிப்படை மாற்றம், முழுமையாகத் தென்படும் வகையில் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை, அனைத்து மக்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைகொள்ளும் வகையிலான சட்டமாக அமைய வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கையில், ‘சர்வதேச நீதிபதிகள், இலங்கைக்கு வருகை தருவதை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை நாம் நிராகரிக்கின்றோம். சர்வதேசத்துக்கு அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிக்கு மாறாக, ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது. ஆகையால், அவ்வாறு செயற்பட முடியாது’ என்றார்.
மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘ஆட்சி அதிகாரங்கள், சமஷ்டி முறையில் பகிரப்பட்டால் நாடு பிளவுபடாது என நாங்கள் சொல்கின்றோம். ஒற்றையாட்சியில் தான், நாடு பிளவுபடுவதற்கான அபாயம் உள்ளது. மாறாக அனைத்து மக்களும் ஆட்சி அதிகாரங்களை உபயோகிக்கும் வகையில், சமஷ்டி முறையிலான ஆட்சி வருமாக இருந்தால், நாடு பிளவுபடுவதற்கான தேவை இருக்காது. இதுதான் எமது நிலைப்பாடு. இது தொடர்பில், அனைத்துக் கட்சிகளுக்கும் எடுத்துச் சொல்வோம்’ என்றார்.
‘அரசியலமைப்புத் திருத்தமாக இருந்தால் கூட்டமைப்பு ஆதரவு வழங்காதா?’ என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘இப்போது நாட்டுக்கு முன்னால் இருப்பது, புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான பிரேரணை. ஆகையால், அது குறித்துத்தான் நாங்கள், எமது கவனத்தைச் செலுத்துகின்றோம்’ என்றார்.
‘தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் விடயங்களை, அவர்களுடன் இணைந்து செய்வீர்களா அல்லது பின் வாங்கி, தனித்துச் செயற்படுவீர்களா? புதிய அரசியலமைப்பில், அரசியல் தீர்வுக்கான விடயங்கள் உள்வாங்கப்படும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடல்கள், முக்கிய தரப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா?’ என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழ் மக்கள் பேரவை மட்டும் இல்லை, யார் யார் எங்களுக்கு யோசனைகளை முன்வைத்தாலும், எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துப் பரிசீலிப்போம் எனக் கூறியுள்ளோம். பலர், தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இதேவேளை, மக்கள் கருத்தை அறிந்துகொள்வதற்காக அரசாங்கம், குழுவொன்றை நியமித்துள்ளது. அந்தக் குழுவும், எல்லா மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கின்றது. அதன் முன்பாகவும் மக்கள், தமது கருத்துக்களை முன்வைக்கலாம்.
கூட்டமைப்பைப் பொறுத்த வரை, தமிழ் மக்களின் ஆணையைச் சுமந்து நிற்கின்ற அரசியல் கட்சியாக நாங்கள், அந்த அரசியலமைப்பு விவகாரத்தில் ஈடுபடுகின்றோம். மேலும், அரசியல் தீர்வு குறித்து உத்தியோகபூர்வமற்ற சில பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என்றார்.