(Comrade Kumaresan Asak)
அறிவியலில் நாட்டம் உள்ளவன் நான். அதன் அடிப்படையில், பொதுவாக முன்னேற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருப்பதாக நம்பி வந்திருக்கிறேன். சமூக அறிவியலிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவன் நான். அந்த அடிப்படையில் சமுதாயம் வளர்ச்சசியடைந்துகொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்து வந்திருக்கிறது, முந்தாநாள் இருந்தது போல் நேற்றைய சமுதாயம் பின்னடைந்த நிலையில் இல்லை, நேற்றைய சமுதாயத்தை விட இன்றைய சமுதாயம் மேலும் முன்னேறியிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது உண்டு.
ஆனால், அண்மைக்காலமாக அரசியல் வெளியில், சமூகக் களத்தில், பண்பாட்டுத் தளத்தில் நடக்கிற நிகழ்வுகளும் ஒரு பத்திரிகையாளராக நான் பதிவு செய்ய வேண்டியிருக்கிற செய்திகளும் அது வெறும் மூட நம்பிக்கை என்ற என்பதை கன்னத்தில் அறைந்து சொல்கின்றன. எங்கும் மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுகின்றன. மதங்களின் பெயர்களால், அவரவர் கடவுள்களின் பெயர்களால் வன்முறைகளும் அடக்குமுறைகளும் மனிதநேயத்திற்கு சவால் விடுக்கின்றன.
இந்தியாவில், எல்லாவகையான பிற்போக்குத்தனங்களும் முன்னெப்போதையும் விட வீரியத்தோடு அரங்கேற்றப்படுகின்றன. பகுத்தறிவு இயக்கம் தழைததிருநத தமிழக மண்ணில் தன் பெயரோடு சாதி அடையாளத்தை ஒட்டவைத்துக்கொள்வது அருவருப்பானதாகப் பார்க்கப்படுகிற வளர்ச்சி ஏற்பட்டிருநதது. இன்று இளைஞர்கள் தங்கள் பெயர்களோடு சாதியை ஒட்டவைக்கிறார்கள். திருமண நிகழ்வுகளுக்கான அழைப்பு விளம்பரங்கள் சாதிப் பெயரோடு சாலையோரங்களில் வைக்கப்படுகின்றன.
ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய எழுச்சியின் அடையாளமாகத் தங்களது சாதிப்பெயரை உரக்கச் சொல்வதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்படிப்பட்ட ஒடுககுமுறைகளைச் செய்கிறவர்கள், தங்களைப் பிறப்பால் உயர்ந்தோர் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை வெளிப்படுத்துவதில் நான்கு பேருக்கான செய்தி இருப்பதாகப் பார்க்கிறேன்.
ஒன்று, தங்களுடைய சமூகத்தினருக்கே நீங்களும் இப்படிச் செய்யுங்கள், நம் பெருமையை நிலைநாட்டுங்கள் என்ற செய்தி.
இரண்டு, தங்களை விட மேலானவர்கள் என்று சோல்லிக்கொள்கிறவர்களைப் பார்த்து, நாங்கள் ஒன்றும் உங்களை விட சளைத்தவர்கள் அல்ல என்று சொல்கிற செய்தி.
மூன்று, ஒதுக்கப்பட்ட, தாழ்ததப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோேருக்கு, நாங்கள் உங்களை விட மேலானவர்கள்தான், என்ன செய்தாலும் நீங்கள் எங்களுக்கு சமமானவர்களாகிவிட முடியாது என்ற செய்தி.
நான்காவது… சமத்துவம், பகுத்தறிவு, முற்போக்கு, தீண்டாமை ஒழிப்பு, சாதிய மறுப்பு என்ற நோக்கங்களுக்காகப் போராடுகிறவர்களுக்கான செய்தி. அப்படியெல்லாம் சாதியத்தை ஒழிக்க விடமாட்டோம், தீண்டாமையை அகற்ற விடமாட்டோம் மூடத்தனங்களுக்கு முடிவுகட்ட விடமாட்டோம், பாகுபாடுகளை மாற்றவிடமாட்டோம் என்ற செய்தியை உணர்த்த முயல்கிறார்கள்.
இது வளர்ச்சியா? சமுதாயத்தின் தளர்ச்சியா? எதிர்காலம் பற்றிய மிரட்சிதான் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. சமுதாய மாற்றத்திற்காக இன்னும் எவ்வளவு வலுவாகப் போராடவேண்டியிருக்கிறது, மக்களிடையே மாற்றுச் சிந்தனைகளை எவ்வளவு விரிவாகக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது…
-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் “தமுஎகச இலக்கிய விருதுகள் -2014” வழங்குவிழா தஞ்சாவூரில் நேற்று (செப்டம்பர் 12, சனிக்கிழமை) நடைபெற்றது. விளிம்புநிலை மக்களுக்கான சிறந்த ஆக்கமாக, லட்சுமணன் எழுதிய “சப்பெ கொகாலு” (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) புத்தகத்திற்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் புத்தகம் விருதுக்குத் தேர்வு பெற்றது ஏன் என்று நடுவர் குழு சார்பில் உரையாற்றிய நான், இப்படித்தான் எனது பேச்சைத் தொடங்கினேன்.