மியான்மாரின் ஆட்சி அதிகாரத்தை மாற்றும் செயற்பாட்டை, வெற்றிகரமானது என, ஜனாதிபதி தெய்ன் செய்ன் புகழ்ந்துள்ளார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை, ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியிடம் வழங்குவதற்கு முன்னர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவ ஆட்சியின் கீழ், பல தசாப்தங்களாகக் காணப்பட்ட மியான்மார், ஆங் சாங் சூகியின் வெற்றியைத் தொடர்ந்து, மாபெரும் ஜனநாயக மாற்றமொன்றை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
‘கஷ்டங்களும் சவால்களும் காணப்பட்ட போதிலும், ஜனநாயக மாற்றமொன்றை இறுதியில் ஏற்படுத்த முடிந்தது” என, அவர் தெய்ன் செய்ன் தெரிவித்தார். ‘இது, மியான்மார் மக்கள் அனைவருக்குமான வெற்றியாகும். எல்லோரும் அறிந்தது போல, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நாங்கள், பலகட்சி ஜனநாயகக் கட்டமைப்பிலிருந்து விலகியிருந்தோர்” எனத் தெரிவித்தார்.
இராணுவத்தைச் சேர்ந்தவரான தெய்ன் செய்ன், 2011ஆம் ஆண்டு ஆட்சியமைத்தார். அந்நாடு, தொடர்ந்தும் இராணுவ ஆட்சியின் கீழ் காணப்படுகின்ற போதிலும், தெய்ன் செய்னின் காலத்தில், ஓரளவு முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.