கனடாவில் வாழும், புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த இரண்டாம் தலைமுறைப் பெண் ஒருவர் தயாரித்த யூடியூப் வீடியோ சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. அவர் அந்த வீடியோவில் தனது தமிழ் சமூகத்தில் உள்ள குறைகளை நையாண்டி செய்துள்ளார். ஊரில் வாழும் உறவினர்களுக்கு, கனடாவில் வாழும் தமிழர்கள் பணம் அனுப்புவதை குறை கூறி கிண்டல் அடித்துள்ளார்.
ஊருக்கு பணம் அனுப்பக் கூடாது என்பதற்கு அவர் கூறும் நியாயங்கள் பின்வருமாறு: கனடாவில் “பணம் காய்க்கும் மரம்” இருப்பதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நினைத்த நேரத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஊரில் இருப்பவர்களுக்கு கனடா வாழ்க்கையின் கஷ்டங்கள் புரிவதில்லை. தங்களது வாழ்க்கைச் செலவுக்கே பணம் இல்லாத நேரம், ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு பணம் அனுப்ப வேண்டுமா?
கனடாவில் பிறந்து வளர்ந்த இந்தப் பெண், கனடாவில் உள்ள நிலைமயை பற்றிக் கூறினாலும், அது மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்தும். கனடாவில் மட்டுமல்லாது, மேற்கு ஐரோப்பாவிலும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிள்ளைகள், தமது பெற்றோர் ஊருக்கு பணம் அனுப்புவதை எதிர்த்து வருகின்றனர். பல குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினை இது.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல, பிற வெளிநாட்டவர் சமூகங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்தது, இருந்து வருகின்றது. முதலாம் தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தாயகத்துடன் இருக்கும் பிணைப்பு, இரண்டாம் தலைமுறையுடன் அறுந்து போகின்றது. அவர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் உள்ள பிரச்சினைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
முதலில் இந்தப் பெண்ணின் கூற்றில் உள்ள நியாயங்களைப் பார்ப்போம். அவர் தெரிந்தோ தெரியாமலோ சில உண்மைகளை கூறி இருக்கிறார். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் முதலாம் தலைமுறையை சேர்ந்தவர்களில், பெரும்பான்மையானோர் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக இருக்கிறார்கள். பலர் வறுமையில் வாழ்கிறார்கள். தங்களது அன்றாட செலவுகளையே ஈடுகட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதெல்லாம் மறுக்க முடியாத உண்மைகள்.
அடுத்ததாக, அந்தப் பெண்ணின் கூற்றில் உள்ள அநியாயங்களைப் பார்ப்போம். கனடாவில் வாழ்ந்து வருவதால், இயல்பாகவே கனடிய மேட்டுக்குடி மனப்பான்மை வந்து விடுகின்றது.
உதாரணத்திற்கு, சராசரி வெள்ளையின கனடியர்கள், ஆப்பிரிக்க நாடுகளை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ, அப்படியே இவரும் நினைத்துக் கொள்கிறார். ஏழை நாட்டு மக்கள் எப்போதும் பணக்கார நாடுகளிடம் கையேந்திப் பிழைக்கின்றன என்ற எண்ணம் வந்து விடுகின்றது.
ஊருக்கு பணம் அனுப்பக் கூடாது என்பதற்கு இவர் கூறும் “நியாயங்கள்”, ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் வாழும் வெள்ளையின அடித்தட்டு மக்கள் சிலர் கூறும் “நியாயங்கள்” தான். இனவாதம் பேசும், தீவிர வலதுசாரிக் கட்சிகள், வெள்ளையின ஏழை மக்கள் மத்தியில் அவ்வாறான கருத்துக்களை விதைத்து வருகின்றன.
ஆகவே, இந்த தமிழ்ப் பெண்ணும், அறிந்தோ அறியாமலோ தீவிர வலதுசாரிகளின் “நியாயங்களை” சரியென்று நம்பி், எமக்கு அதைப் போதிக்கிறார்.
இலங்கை போன்ற ஏழை நாடுகளை சுரண்டிக் கொழுக்கும், கனடா போன்ற பணக்கார நாடுகளின் அரசியல் பற்றி எதுவும் அறியாதிருக்கிறார். “வளர்ந்து வரும் மூன்றமுலக நாடுகளுக்கு கொடுக்கும் கடன் உதவியை நிறுத்த வேண்டும்” என்ற நிபந்தனையை, இனவாதக் கட்சிகள் அரசியல் கோரிக்கையாக வைத்திருக்கின்றன. அதைப் பற்றி நாடாளுமன்றத்திலும் பேசுகின்றன.
பணக்கார நாட்டு அரசுகள், ஏழை நாடுகளுக்கு கொடுக்கும் கடனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கும், இலங்கையில் வாழும் உறவினர்களுக்கு பணம் அனுப்பக் கூடாது என்று சொல்வதற்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஏழை நாடுகளுக்கு கடன் கொடுப்பதுடன், அங்கு வாழும் மக்களின் உழைப்பையும், வளங்களையும் சுரண்டுவதால் தான், பணக்கார நாடுகளில் அனைத்துப் பிரஜைகளையும் வளமாக வாழ வைக்க முடிகின்றது. அதாவது, அங்குள்ள ஏழைகளிடம் சுரண்டப் பட்ட பணம் தான், கனடாவின் நலன்புரி அரசுக்கு அடிப்படை. இலங்கையில் வாழும் ஏழை சைக்கிளில் போவதால் தான், கனடாவில் வாழும் ஏழை காரில் செல்ல முடிகின்றது.
அதனால், ஏழை நாடுகளில் வாழும் மக்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதாகத் தான், உறவினர்களுக்கு அனுப்பும் பணம் அமைந்துள்ளது. அதுவும் ஒரு சொற்பத் தொகை தான். கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப் படும் பணத்தின் அளவை விட, இலங்கையில் இருந்து கனடாவுக்கு போகும் பணத்தின் அளவு நூறு மடங்கு அதிகமாகும்.
ஊருக்கு பணம் அனுப்புவதற்குப் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரக் காரணங்கள், இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தெரிவதில்லை. வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடொன்றில் கல்வி கற்று விட்டால், அறிவு வந்துவிடும் என்று நினைப்பது அறியாமை.
(Tharmalingam Kalaiyarasan)