ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து வைத்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.
அடுத்த மனிதனின் வலியினையும், கண்ணீரையும் பார்த்து மகிழ்கின்ற செயற்பாடு குரூரத்தனத்தின் வெளிப்பாடாகும். ஆயினும், யோஷித ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டமையினையும், அதனைப் பார்த்து தந்தையார் மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்தியமையினையும் கண்டு மக்களில் அதிகமானோர் சந்தோஷப்பட்டனர், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மஹிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சிக் காலத்தில் அடித்து விளையாடிய பந்துகளுக்கு கரகோசம் செய்ய முடியாத மக்கள், இப்போது அந்தப் பந்துகள் அவரைத் திருப்பியடிக்கையில் கரகோசிக்கின்றார்கள். அதனால்தான், மஹிந்த கண்ணீர் விடுவதைப் பார்த்து பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
ஆயிரமாயிரம் பிள்ளைகளை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அநியாயமாகப் பலிகொடுத்த பெற்றோர்களின் சாபம், இப்போது பலிக்கத் தொடங்கியிருப்பதாகவே பாதிக்கப்பட்ட மக்கள் பார்க்கின்றனர். ஒரு ஜனநாயகத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக இருந்து யுத்தத்தினை வென்று கொடுத்த சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமற்றத்தில் நிறுத்தி, சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்தபோது, அவரின் பிள்ளைகளும் மனைவியும் சிந்திய கண்ணீருக்கு, இப்போது இறைவன் விடையளிக்கத் தொடங்கியிருப்பதாகவே, அப்பாவி மக்கள் நம்புகின்றனர்.
ஆனாலும், சரத் பொன்சேகாவை மஹிந்த ராஜபக்ஷ தண்டித்தமையைப்போல், சட்டத்துக்கும் நீதிக்கும் விரோதமாக யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்படவில்லை என்பதுதான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய செய்தியாகும். யோஷித ராஜபக்ஷ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு கடற்படை அதிகாரியாகவும் கால்டன் ஸ்போட்ஸ் நெற்வேக் எனப்படும் சீ.எஸ்.என். ஊடக வலையமைப்பின் உரிமையாளராகவும் யோஷித மேற்கொண்டதாகக் கூறப்படும் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீ.எஸ்.என். என்பது தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளைக் கொண்ட ஓர் ஊடக வலையமைப்பாகும்.
2011ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி இந் நிறுவனம் ஒரு கம்பனியாகப் பதியப்பட்டது. 2011 மார்ச் 03ஆம் திகதி இந்த நிறுவனத்துக்கான ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அதே வருடம் மார்ச் 07ஆம் திகதி சீ.எஸ்.என். தொலைக்காட்சி அதன் ஒளிபரப்பினை ஆரம்பித்தது. இந்த நிறுவனத்துக்கு மேலும் பல ஊடக அலைவரிசைகளும் உள்ளன. மேற்படி ஊடக வலையமைப்பு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதாகும். மஹிந்தவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ இந் நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யோஷித ராஜபக்ஷ இல்லை என்று, அவரின் தரப்பு மறுத்து வருகிறது.
சீ.எஸ்.என். நிறுவனம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த நிறுவனத்தின் அலைவரிசை விரிவாக்கல் பணிகளுக்காக அரசாங்க உடமைகள் பயன்படுத்தப்பட்டமை. குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிதி மானியங்களின் மூலம் நிறுவனத்தை ஆரம்பித்து, நடத்திச் செல்கின்றமை என்று, குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை நீளமானவை. சீ.எஸ்.என். நிறுவனத்துக்கான ஆரம்ப முதலீடு 07 மில்லியன் ரூபாய் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் 234 மில்லியன் ரூபாய் (2.3 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியினை அந்த நிறுவனம் முதலீடாகப் பெற்றுள்ளது. இந்த நிதிகள் வெளிநாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
ஆனால், வெளிநாட்டிலிருந்து நிதியினைப் பெற்றுக் கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய எந்தவித ஒழுங்கு விதிகளும் இதன்போது பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீ.எஸ்.என். நிறுவனத்துக்கு கிடைத்த மேற்படி நிதி முதலீடுகள் யாரிடமிருந்து கிடைத்தன என்பதற்கான ஆதாரங்களை, உரிய தரப்பினர் விசாரணைகளின்போது முன்வைக்க தவறியுள்ளனர். மேலும், கறுப்புப் பணத்தினை சட்டபூர்வ பணமாக சலவை செய்து கொள்வதற்காகவே, சீ.எஸ்.என். நிறுவனத்தில் முலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதேவேளை, சீ.எஸ்.என். நிறுவனத்தின் உரிமையாளர் தான் இல்லை என்று யோஷித ராஜபக்ஷ மறுத்தாலும் கூட, அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
யோஷித ராஜபக்ஷவின் மின்னஞ்சல்; ஊடான தொடர்புகளை ஆராய்ந்தமையினையடுத்து, சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவராகவும், அந்த நிறுவனம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்பவராகவும் அவர் தொழிற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சீ.எஸ்.என். ஊடக நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். அதன் பின்னர், யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். நிறுவனத்துடன் தொடர்புடைய முக்கியஸ்தர்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இதன் பின்னர் மேலிடத்தின் உத்தரவுக்கமைவாக இவர்கள் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதவானின் உத்தரவுக்கமைவாக, யோஷித உள்ளிட்டோர் வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்கள். இந்த நிலையில், சீ.எஸ்.என். நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆவணங்கள் தொடர்பான குற்றங்கள், சுங்க மற்றும் கம்பனிச் சட்டங்களை மீறியமை உள்ளிட்ட செயற்பாடுகளில் சீ.எஸ்.என். நிறுவன முகாமைத்துவம் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்னொருபுறம் யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்து கொண்டதிலிருந்து, கடற்படை சேவைக் காலம் வரையில் மேற்கொண்ட மோசடிகள் தொடர்பாக மற்றுமொரு விசாரணையும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. யோஷித ராஜபக்ஷ, 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி பிறந்தவர். இவர், 2006ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் ஒரு கடெற் உத்தியோகத்தராக கடற்படையில் இணைந்து கொண்டார். கடெற் உத்தியோகத்தராக விண்ணப்பிக்கின்றவர், ஆகக் குறைந்தது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 06 திறமைச் சித்திகளை ஒரே அமர்வில் பெற்றிருக்க வேண்டும் என்றும், அவற்றில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் ஆகியவை உட்பட மேலும் இரு பாடங்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்றும் அப்போது, அந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்பு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், யோஷித ராஜபக்ஷ கடற்படையில் சேர்ந்து கொண்டபோது சமர்ப்பித்த க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி, சிங்களப் பாடத்தில் அவர் திறமைச் சித்தியினைப் பெற்றிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. யோஷித ராஜபக்ஷ, 2003ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பெற்றுக் கொண்ட பெறுபேற்றின்படி, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், வர்த்தகம், பௌத்தம் மற்றும் சித்திரம் ஆகிய பாடங்களில் மட்டுமே திறமைச் சித்திகளைப் பெற்றிருந்தார். பின்னர் 2004ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களில் அவர் அதிதிறமைச் சித்திகளைப் பெற்றார்.
இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 2006ஆம் ஆண்டு தோற்றிய யோஷித ராஜபக்ஷ, இரண்டு பாடங்களில் மட்டுமே சித்தியடைந்திருந்தார் என்றும், அந்தவகையில், அரசியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் அவர் திறமைச் சித்திகளைப் பெற்றிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. இந்தத் தகவல்களை நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் கடந்த மாதம் 26ஆம் திகதி நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். சபையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ் விடயங்களைக் கூறினார்.
இன்னொருபுறம், யோஷித ராஜபக்ஷவின் தனியாள் கோப்பினை கடற்படைத் தலைமையகத்தில் ஆராய்ந்தபோது, அதில் அவரின் க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வைக்கப்படவில்லை என்கிற விடயமும் தெரியவந்துள்ளது. இவை தவிர, யோஷித ராஜபக்ஷ கடற்படையில் சேவையாற்றிய காலப்பகுதியில் கற்கை மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதாக வெளிநாடுகளுக்குச் சென்று, அரசாங்க நிதியினை மோசடியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறிப்படுகிறது. இவை தொடர்பில் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இன்னும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அவையும் ஆரம்பமானால் நிலைமை படுமோசமாகும்.
நாட்டில் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தாய் மண்ணுக்காகத் தனது புத்திரனை அர்ப்பணிக்கும் ஒரு தந்தையாகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவும், அதனூடாக தன்னை ஒரு தேச பக்தி நிறைந்த ஆட்சியாளராக நிறுவிக் கொள்வதற்காகவுமே மஹிந்த ராஜபக்ஷ, தனது இரண்டாவது புதல்வரை கடற்படையில் சேர்த்தார். ஆனால், அவரே எதிர்பாராத வகையில் அந்த விடயம் அவருடைய மகனின் கழுத்துக்கு இப்போது கத்தியாக வந்து விழுந்திருக்கிறது. தனது ஆட்சிக்கு முடிவு கிடையாது என்கிற அகங்காரத்திலும், இந்த நாட்டினை தனது பரம்பரையினர்தான் தொடர்ந்தும் ஆளப்போகிறார்கள் என்கிற குருட்டு நம்பிக்கையிலும்தான் மஹிந்த ராஜபக்ஷ இருந்தார்.
அதனால்தான், அவரும் அவரின் குடும்பத்தாரும் சட்டம், ஒழுங்கு என்று எதையும் நினைத்துப் பார்க்காமல், தமது மனம்போன போக்கில் அனைத்தையும் செய்து முடித்தனர். அதன் விளைவுகளைத்தான் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தாரும், அடிக்கடி விசாரணைகளை எதிர்கொண்டவாறு உள்ளனர். வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு முன்பாக ஆஜராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது ஒருவகையான உளவியல் சித்திரவதையாகும். விசாரணைகள் எனும் பெயரில் தன்னை அழைத்து பல மணி நேரம் காக்க வைத்து, உளரீதியாக இந்த ஆட்சியாளர்கள் துன்புறுத்துவதாக ஊடகங்களிடமே மஹிந்த ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் அழாத குறையாகச் சொல்லியிருந்தார்.
இதுபோதாதென்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றுமொரு உளவியல் யுத்தமொன்றினை ஆரம்பிக்கும் தந்திரோபாய செயற்பாடு ஒன்றில், ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர் போலவும் தெரிகிறது. மறைந்த எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை நியமிப்பதோடு, அவருக்கு அமைச்சுப் பதவியொன்றினையும் வழங்குவதுதான் ஆட்சியாளர்களின் அந்த நடவடிக்கையாகும். மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சியில் சாதாரணமானதொரு நாடாளுமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கும் போது, அதே சபையில் சரத் பொன்சேகாவை ஆளுந்தரப்பு அமைச்சராக்குவதென்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மிகப்பெரும் உளவியல் யுத்தமாகும்.
சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்தில் கண்டால் விரண்டோரும் நிலை இனி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உருவாகும். மஹிந்த ராஜபக்ஷ மிக அண்மையில் மேற்கொண்ட புத்திசாதுரியமற்ற தீர்மானம் எதுவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனமைதான். நல்லாட்சியாளர்களே, சிங்கத்தின் வாலை மிதித்து விட்டீர்கள். சிங்கம் உங்களை துண்டு துண்டாகக் கிழித்தெறியும் என்கிற அர்த்தப்பட ரோஹித ராஜபக்ஷ, தனது பேஸ்புக் பக்கத்தில் அட்டைக் கத்தி வீசி, சண்டித்தனம் பேசியிருக்கின்றார். சரத் பொன்சேகாவுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவி ஆகியவை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க நிதிகளை மோசடி செய்தமை மற்றும் அரசாங்கத்தின் வளங்களை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
(மப்றூக்)