மெல்லென பாயும்நீர் கல்லும் உருகப்பாயும்!

சர்ச்சைக்குரிய விடயமொன்று நீண்ட கால தவிர்ப்பு, இழுபறி, விமர்சனம், கண்டனத்துக்கு அப்பால், இலங்கையின் 68 வது சுதந்திரதின வைபவத்தில் அரங்கேறியுள்ளது. நாட்டின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில், நீண்டகாலமாக தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலையில், இம்முறை தமிழிலும் பாடப்பட்டமை சம்மந்தரின் முதுமையா? அல்லது மைத்திரியின் அனுபவமா? அல்லது இரண்டுமா?. காரணம் முதுமை, அனுபவம் இரண்டுமே அழிவை தடுக்கும். ஆக்கத்தை ஊக்கிவிக்கும். பொறுமையை இயலாமை என எதிரி எண்ணிவிடக்கூடாது என்பதை, ஆங்கிலேயருக்கு உணர்த்தியவர் அண்ணல் காந்தி. ஹிம்சைக்கு எதிராக அவர் வரித்துக்கொண்ட அகிம்சை கொள்கை, ஆரம்பத்தில் அழிவுகளை தந்த போதும் இறுதியல் இந்தியாவுக்கு விடுதலை பெற்று கொடுத்தது.

சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தி, வெற்றி காண முடியவில்லை என்ற நிலை தோன்றிய போது, அண்ணன் அமிர்தலிங்கம் எதிர்ப்பு அரசியலை தீவிரமாக்கினார். பிரிவினை கோரிக்கை முன்னெழுந்த போது, இருபக்கமும் அழிவுகள் ஆரம்பமாகி, பிரபாகரனின் தனிநபர் எதோச்சாதிகார போக்கினால் பேரழிவில் முடிவுற்றது. சகல நிகழ்வுகளையும் பார்த்த சம்மந்தர், இன்று நிலைமைகளை தன் அனுபவ முதுமை கொண்டு ஆமை வேகத்தில், எடுத்த கருமத்தை முடித்தே தீருவேன் என்ற உறுதியுடன் செயல்ப்படுகிறார் அவருக்கு துணையாக துணிவுடன் மக்கள் பிரதிநிதியான சுமந்திரன் செயல்ப்படுகிறார். முதல் தடவை கட்சியால் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், இம்முறை மக்களிடம் நிலைமைகளை கூறி, அவர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டமை, அவரது பொறுப்பை அதிகரித்துள்ளது.

முழு நாடும் குடும்ப ஆட்சிமுறைக்குள் வரும் அபாயநிலை தோன்றியபோது, பின் விளைவுகளின் விபரீதம் தெரிந்தும், விசப்பரீட்சைக்கு தன் தலையை தாரைவார்க்க தயாரானவர் மைத்திரி. வெற்றிநாயகனாக, நாட்டின் ஜனாதிபதியா தெரிவு செய்யப்பட்டதும் அவர் சொன்னது “நாடு மீண்டும் இருண்ட யுகத்துள் செல்ல அனுமதிக்க முடியாது” என்பதே. பாராளுமன்றத்தில் சுமந்திரன் தனது உரையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சுமுகமான உறவைத்தான் பேணவிரும்பினார்கள். ஆனால் நீங்கள் தான் உங்களுடன் வாழ்ந்த எங்களின் சொத்துக்களை எரித்து, அழித்து, எம்மை அடித்து ரயில்களிலும், கப்பல்களிலும் ஏற்றி வடக்கிற்கும் கிழக்கிற்கும், பலவந்தமாக அனுப்பினீர்கள் என பாட்டாலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களின் நினைவில் அந்த இருண்ட யுகத்தை மீண்டும் பதிவு செய்தார்.

சம்மந்தரின் முதுமை அனுபவமும், சுமந்திரனின் தென்னிலங்கை வாழ்க்கை அனுபவமும் பலரது விமர்சனத்துக்கு உட்பட்டாலும், பலன் கிடைக்கும்வரை பொறுமைகாத்தல் நலம் என்பதே என்போன்றவர் நிலைப்பாடு. வடக்கு பிரதிநிதிகள் என்றால் பிரிவினைவாதிகள் என்று நினைக்கும், பாட்டாலி சம்பிக்க போன்றவர்கள் அமரும் சபையில், தெற்கில் வாழ்ந்து அங்கு ஆரம்ப கல்வி முதல் சட்டக்கல்வி வரை தொடந்து, சட்டத்தொழில் பார்த்த சுமந்திரன், ஆங்கிலம் சிங்களம் தமிழ் என அவரவர்க்கு விளங்கும் மொழியில் கூறிய விளக்கம், நிச்சயம் அவர்களுக்கு உறைத்திருக்கும். பிரிவினைகோசம் பின்நாளில் வந்தது. ஆரம்பத்தில் ஐம்பது / ஐம்பது கேட்டு, பின் சமஸ்டி கேட்டு, கடைசியில் ஏற்றுக்கொண்ட மாவட்டசபைக்கும் அதிகாரம்தராது, இராணுவ தீர்வை முன்னெடுத்த போதுதுதான், இளைஞர் கைகளில் ஆயுதங்கள் ஏறின.

இந்திய தலையீட்டால் உருவான வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையும் அதிகாரபகிர்வில், மத்திக்கா? மாகாணத்துக்கா? என்ற தெளிவற்ற பொதுநிரல் விடயத்தில் இழுபறிப்பட்டு, இறுதியில் பத்தொன்பது கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றிய தீர்மானத்தை, ஈழப்பிரகடனம் என கூறி, அந்த சபையை கலைத்தபின்பும் அடங்காது, இருபது வருடங்களுக்கு மேல் இணைந்திருந்த சபையை, இணைத்த முறை தவறு என்ற தீர்ப்பின் மூலம் பிரித்து, இந்திய அமைதி படையை வெளியேற்ற பிரேமதாசாவும், தன் வெற்றியை நிச்சயிக்க மகிந்தவும் கொடுத்த ஆயுதங்கள், கோடிக்கணக்கான பணத்தின் துணையுடன், பிரபாகரனின் ஆடிய பேயாட்டம், இரண்டு பக்கமும் பேரழிவை தந்த பின்பும் இனப்பிரச்சனைக்கான காரணங்கள் தீர்க்கப்படாது தொடர்கிறது.

இத்தனை விடயங்களையும் அறிந்த, அனுபவப்பட்ட மைத்திரி, நிரந்தர தீர்வுக்கான தன் பயணத்தின் ஆரம்ப நடவடிக்கையாக எடுத்த முடிவின்படி, தமிழில் தேசியகீதம் பாடபட்ட நிகழ்வு, முதுமையின் கண்களில் நீர் கோக்க வைத்தது. நாளை நிச்சயம் விமர்சனம் வரும். சுதந்திரதினத்தில் கலந்துகொண்டதால் தனக்கு கிடைக்கப் போகும் சலுகைகளை எண்ணிப்பார்த்து, சம்மந்தர் ஆனந்தகண்ணீர் மல்கினார் என, ஆசிரியர் தலையங்கம் கூட வரும். அதற்கு சம்மந்தர் சிங்கக்கொடியை நான் காளியின் வாகனம் என்பதால் தான் ஏந்தினேன் என முன்பு கூறியது போல, கடற்காற்று உப்புநீர் என் கண்களை பனிக்கவைத்தது என கூறலாம். இவ்வாறான விதாண்டவாத, விசமத்தனமான விமர்சனம் செய்யும், விளக்கம் குறைந்தவர்களுக்கு சம்மந்தரின் பதில் அவ்வாறுதான் அமையும்.

2016 ல் ஒரு தீர்வை எட்டுவோம் என்ற திடமான நம்பிக்கையை கொண்டுள்ள சம்மந்தர், அதற்க்கான நல்லெண்ண சமிக்ஞையை, தென்னிலங்கைக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். நாம் கடந்த காலத்தில் விட்ட தவுறுகளை திருத்திக்கொள்ள, தமிழ் மக்களும் எமக்கு உதவவேண்டும், என அண்மையில் தனது பேட்டியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார். எங்கள் தவறுகளை ஏற்கிறோம் பகைமையை மறந்து நல்லிணக்கம் ஏற்பட இணைவோம், அதற்கு உதவுங்கள் என்ற அவரின் உள்மன கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், நாம் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டவர்கள் என்ற சந்தேக மனப்பான்மையை விட்டு, சரிநிகர் சமானமாய் அனைவரும் வாழும் சூழ்நிலையை உருவாக்க நாமும் நியாயமான, கௌரவமான விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகவேண்டும்.

மைத்திரியால் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களை கைவிட முடிந்தது போல், இனப்பிரச்சனைக்கான தீர்வை உடனடியாக எடுக்க முடியாது. தோல்வியின் தாக்கத்தில் இருந்து மீளாத மகிந்த அணி அதற்கு தடைகள் ஏற்படுதிக்கொண்டிருக்கும் நிலையில், நிதானமாக செயல் படுவதன்மூலம் தான் குறித்த இலக்கை அடையமுடியும். 2015ல் பதவிக்கு வந்த உடன் 67 வது சுதந்திரதின நிகழ்வில் செயல்படுத்த முடியாமல் போனதை, ஒரு வருடத்தில் நிகழ்த்திய அவரின் நிதானம், நீரோட்டம் போல் பல கூழாங்கற்களை உருட்டிய பின்பு தான், பிரவாகம் எடுக்கும் என்ற எதிர்பார்க்கை நிச்சயம் நடக்கும். ஏனென்றால் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மைத்திரி, ரணில் சந்திரிகா, சம்மந்தர், சுமந்திரன் போன்றவர்கள் தீர்வை நோக்கிய தம் முடிவில் திடமாக இருக்கின்றனர்.

தமிழிலும் தேசியகீதம்பாட அனுமதிக்க வேண்டும் என, அமைச்சர்கள் உட்பட பலரும் முன்னைய அரசிடம் முன்வைத்த கோரிக்கை, கவனத்தில் எடுக்கப்படவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. பத்தோடு பதினொன்றாய் இருப்பவர் கோரிக்கை ஏற்க்கப்படமாட்டது. ஒருவர் தான் சார்ந்தவரை வளர்க்கிறாரா? இல்லை தன் சமூகத்தை வளர்க்கிறாரா? சொந்தக்காலில் நிற்கிறாரா? அல்லது எம் பந்தல்காலில் சாய்த்து செயல்ப்படுகிறாரா? என்ற களநிலவரம், சிலரை முன்னிறுத்தும் சிலரை பின்தள்ளும். ஆளுமை உள்ளவர், மக்களின் பேராதரவு உள்ளாவர்களை, ஆட்சியாளர் அனுசரிக்கமுயல்வர். தன்னில் தங்கியிருப்போர் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதை தவிர்ப்பர். அதே வேளை தங்களின் தேவைக்கு பயன்படுபவர்களின், சொந்த தேவைகளுக்கு மட்டும் சலுகை வழங்குவர்.

(ராம்)