நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தியோகபூர்வு அறிவிப்பு, நேற்று (02) மாலை, விடுக்கப்பட்டன. மூன்றாவது கொரோனா அலைக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், தளர்வின்றி தொடர்ச்சியாக 19 நாள்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதுடன், இதுவரை 52 கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 19 ஆண்கள், 12 பெண்கள் அடங்கலாக 31 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் மரணமடைந்துள்ளனர் எனவும் மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளதாகவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.