அப்பன் குதிருக்குள் இல்லை!

இலங்கையில், கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆர்வக் கோளாறில் செய்யும் பல விடயங்கள், இவர்களினதும் இவர்கள் சார்ந்தோரினதும் தலைகளில் இவர்களே மண்ணை வாரி இறைக்கும் நிலையினை ஏற்படுத்தி விடும் அபாயமுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை வந்திருந்தார். இலங்கை மீது மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய ஜெனீவா பிரேரணையினை அமுலாக்குதல் பற்றியதாக ஹுஸைனின் விஜயம் அமைந்திருந்தது.

ஜெனீவா பிரேரணை குறித்து நாம் அறிவோம். யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவா பிரேரணை சுட்டிக்காட்டியிருந்தது. ஆயுத மோதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் புலிகள், பாரிய மனித உரிமை மீறல்களைப் புரிந்ததாக அந்தப் பிரேரணை தெரிவித்துள்ளது. ஆயினும், இராணுவத்தினர், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையினை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இராணுவத்தினர் அவ்வாறான மீறல்களில் ஈடுபட்டிருந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே இப்போதைய ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில் கூட, படையினரின் கௌரவம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைனின் இலங்கை வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்லப் பிள்ளையான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறான ஆர்ப்பாட்டமொன்றினை முன்னின்று நடத்தியிருந்தார். இலங்கைப் படையினரைத் தண்டிப்பதற்காகவே இங்கு உயர்ஸ்தானிகர் ஹுஸைன் வந்துள்ளார் என்பது போலவும், அவ்வாறானதொரு நிலைமையிலிருந்து படையினரை காப்பாற்றுவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தினை தாங்கள் நடத்துவது போலவும் விமல் வீரசன்ச படம் காட்டியுள்ளார். ஆனால், விமலின் இந்தச் செயற்பாடு, ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதைப் போல் உள்ளது. நபர் ஒருவரைக் கடன்காரன் தேடி வருகிறான். கடனைக் கொடுப்பதற்கு வசதியில்லை. கடன்காரனுக்கு ஒளிந்து கொள்ள வேண்டிய நிலைமை. அதனால், வீட்டிலிருந்த குதிருக்குள் அந்த நபர் ஒளிந்து கொள்கிறார். குதிர் என்பது தானியங்களைச் சேமித்து வைக்கும் ஒரு வகைக் கூடாகும். குதிருக்குள் ஒளிந்து கொண்டவர் தனது பிள்ளையிடம், அப்பா இல்லை என்று, வெளியில் நிற்கும் கடன்காரனிடம் கூறுமாறு சொல்கிறார்.

குழந்தைகள் சூதுவாது அறியாவதர்கள். அவர்களுக்கு பொய் சொல்ல வராது. வெளியில் நின்ற கடன்காரனிடம் போன குழந்தை, ‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்றது. நேரடியாகப் போய், குதிருக்குள் ஒளிந்திருந்த நபரை பிடித்துக் கொண்டான் கடன்காரன். மனித உரிமை உயர்ஸ்தானிகரின் வருகைக்கு எதிரான விமல் வீரவன்ச போன்றவர்களின் செயற்பாடுகள் இந்த வகைக்குள்தான் அடங்கும். இதேவேiளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும், மஹிந்தராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பங்குக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். புலம்பெயர்ந்த தமிழர்களின் தேவைகளுக்கேற்ப, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை செயற்பட்டு வருவதாக அவர் சாடியிருக்கின்றார். இவ்வாறான விமர்சனங்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வெளியிடுவது புதிய விடயமல்ல.

ஆயினும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன் இலங்கையில் தங்கியிருந்தபோது, கோட்டா இவ்வாறு கூறியிருப்பது கவனத்துக்குரியதாகும். யுத்த காலத்தில் பாரிய குற்றங்களைப் புரிந்தாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், சில தமிழ் ஊடகங்களும் ‘அரசியல் கைதிகள்’ என அழைக்கின்றனர். மேற்படி ‘அரசியல் கைதி’களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றது. ஆயினும், இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் இந்தக் கருத்தை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். யுத்;த காலத்தில் குண்டு வைத்தல், கொலை செய்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாகக் கருத முடியாது என்றும் நீதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், இலங்கைக்கு வந்திருந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், மேற்படி கைதிகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். உயர்ஸ்தானிகர் ஹுஸைன் தெரிவித்துள்ள கருத்தானது அவர் மீதான விமர்சனங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளது. பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்குவதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது என்று ஹுஸைன் கூறியிருக்கின்றார். மேலும், அரசாங்கத்தின் நீதி முறைமைகளினூடாகவே மேற்படி விடுதலைப் புலிகளின் விவகாரம் கையாளப்படுதல் வேண்டும் என்;றும் அவர் வலியுறுத்தியிருந்தார். மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இந்த நிலைப்பாட்டினை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறியிருந்தார். சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, வடக்கு முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் போதுதான், உயர்ஸ்தானிகர் ஹுஸைன் மேற்கண்ட பதிலைத் தெரிவித்திருந்தார்.

ஆக, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பக்கச் சார்பானவர், அவர் புலம் பெயர் தமிழர்களின் தேவைகளுக்கு ஏற்ப செயற்படுகின்றார் என்பது போன்ற விமர்சனங்களுக்கு, ஹுஸைனின் மேற்படி நிலைப்பாடு தடாலடியானதொரு விடையினை முன்நிறுத்தியுள்ளமையினை அவதானிக்க முடிகிறது.ஜெனீவா பிரேரணையின் அடிப்படையில், யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்புக்களைத் தண்டிப்பதென்கிற விடயமானது லேசுப்பட்ட காரியமாக அமைந்து விடப்போவதில்லை. இது சாத்தியமான விடயமாகுவதும் சந்தேகம்தான். சிலவேளை, அவ்விடயம் சாத்தியமானாலும், இழைக்கப்பட்ட குற்றத்துக்காக யாரைத் தண்டிப்பது என்கிற கேள்வி, இன்னொருபுறம் சர்ச்சைக்குரியதாக மாறிவிடக் கூடும். யுத்த காலத்தில் படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்தக் குற்றங்களுக்காக யாரைத் தண்டிப்பது என்கிற கேள்விக்கு விடை காணுதல் அவசியமாகும்.

நேரடியாக குற்றத்தில் ஈடுபட்ட படையினரையா? அல்லது படையினருக்கு கட்டளைகளைப் பிறப்பித்த மேலதிகாரிகளையா? அல்லது ஆட்சியாளர்களையா தண்டிப்பது என்கிற கடினமான கேள்விகள் இங்கு உள்ளமையினை மறுத்தொதுக்க முடியாது. சரி, இந்தக் கேள்விகளுக்கும் விடை கண்டாயிற்று என வைத்துக் கொள்வோம். அடுத்து இன்னுமொரு கேள்வி இங்கு எழுகிறது. யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தரப்பினரும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஜெனீவா பிரேரணை சுட்டிக்காட்டுகின்றது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபணமாகுமாயின், விடுதலைப் புலிகள் சார்பில் யாரைத் தண்டிப்பது? விடுதலைப் புலிகளின் தலைமை இப்போது உயிருடன் இல்லை என்பதற்காக, புலிகளைத் தண்டிக்காமலேயே விட்டு விடுவதென்பது நியாயமாக இருக்காது. எனவே, குற்றங்கள் அடையாளம் காணப்படுதவற்கு முன்னதாக, அடையாளம் காணப்படும் குற்றங்களின் பொறுப்புதாரிகளாக யாரை முன்னிறுத்துவது என்பதையும், அந்தக் குற்றங்களுக்காக யாரையெல்லாம் தண்டிப்பதென்பதையும் முதலில் தீர்மானிக்க வேண்டியதொரு தேவையும் இங்கு உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த பிரேரணையானது, அமெரிக்காவின் அரசியல் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அமைந்ததொன்று என்பதை நாம் மறந்து விடலாகாது. ஜெனீவா தீர்மானம் அமெரிக்காவின் தலைiமையில் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும். முன்னைய ஆட்சியாளர்கள், அமெரிக்க விரோதக் கொள்கையுடன் செயற்பட்டமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. மனித உரிமைகள் பேரவையினூடாக இலங்கையின் ராஜபக்ஷ ஆட்சியாளர்களை அமுக்கிப் பிடிக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. அதற்காகவே, அந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டது என்பதுதான் நிஜமாகும். ஆனால், இப்போது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளை அனுசரித்து நடக்கும் ஆட்சி மாற்றம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெனீவா பிரேரணையினை தொடர்ந்தும் அமெரிக்கா தூக்கிப் பிடிப்பதற்கான தேவைகளில்லை.

மட்டுமன்றி, இலங்கையின் தற்போதைய அரசு மீது, அதிருப்திகள் ஏற்படும் வகையிலான சூழ்நிலைகள் உருவாகுவதையும் அமெரிக்கா விரும்பப் போவதுமில்லை. காரணம், அவ்வாறான நிலையானது மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கு அரசியல் ரீதியில் சாதகமாக அமைந்து விடும். மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைப் படையினர் தண்டிக்கப்படுவார்களாயின், தற்போதைய ஆட்சியாளர்கள் மீது பெரும்பான்மையான சிங்கள மக்களின் அதிருப்தியும், கோபமும் திரும்பி விடும். அப்படியானதொரு நிலைமை ஏற்படுவது இப்போதுள்ள அரசின் இருப்புக்கு ஆபத்தாகவும் முடிந்து விடக்கூடும். எனவே, அப்படியொரு நிலை ஏற்படுவதை, தற்போதைய நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் விரும்பப் போவதில்லை. மட்டுமன்றி, படையினரைத் தண்டிக்கும் முடிவொன்றுக்கு ஆட்சியாளர்களும் இணங்கிச் செல்ல மாட்டார்கள். ஆக, ஜெனீவா பிரேரணையானது யுத்தத்தின்போது பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கும் நிலைப்பாட்டிலிருந்து நழுவிக்கொள்ளும்.

ஆயினும், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை மேம்படுத்துமாறு மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தும் என நம்பலாம். அவ்வாறான நல்லிணக்க மேம்பாடுகள் இலங்கையில் ஏற்படும்போது, அவற்றுக்காக இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்களை மன்னித்து விடுகிறோம் என்று, ஒரு கட்டத்தில் அமெரிக்கா அறிவித்து விடவும் கூடும். எனவே, யுத்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தண்டனை பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதை விடவும், தற்போதுள்ள சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, சிறுபான்மையினருக்கான உரிமைகளை வென்றெடுக்க முயற்சிப்பதுதான் சாணக்கியமான செயற்பாடாக அமையும். இலங்கை விவகாரத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கொள்கையும், நிகழ்ச்சி நிரல்களும் உள்ளன. அவற்றினைத் தாண்டி அந்த நாடுகள் செயற்படப்போவதில்லை என்கிற மிக எளிமையான உண்மையினைக் கூட, இன்னும் நம்மில் பலர் விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளமைதான் இங்கு கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியா இருக்கிறது என, ஒரு காலத்தில் நம்பிக் கொண்டிருந்ததைப் போல, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்தற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் இலங்கை வந்து சென்றார் என்று நம்புவதும் அபத்தமானதாகும்.

(மப்றூக்)