நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ச உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் இன்றுடன் காலாவதியான நிலையிலேயே, இன்று காலை அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். சிறைச்சாலைப் பேருந்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில், யோசித ராஜபக்ச, கொண்டு வரப்பட்ட போது நீதிமன்றத்தில் அவரது தந்தையான மகிந்த ராஜபக்ச, உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் குவிந்திருந்தனர்.
யோசித ராஜபக்ச, ரொகான் வெலிவிட்ட, நிசாந்த ரணதுங்க உள்ளிட்டவர்கள் கடுவெல நீதிமன்ற நீதிவான் தம்மிக ஹேமபால முன்பாக நிறுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இதையடுத்து. அவர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.. வழக்கமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் மகிந்த ராஜபக்ச இன்று ஊடகங்களிடம் எதையும் பேசாமல் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்றுவரை சிறைவாடும் அப்பாவி தமிழ் இளையவரின் பெற்றோர்படும் துயர்பற்றிய அனுபவ அறிவு அவரை பேசவிடாமல் செய்திருக்கும்.