எங்களுடைய பார்வையில் தமிழர்களில் அதிகப் பெரும்பான்மையோரினது விருப்பும் வேட்கையும் ஒரு நிலையானதும் பாதுகாப்பானதுமான வாழ்வே -பத்மநாபா EPRLF

திரு. லால் விஜேநாயக்கா தலைமையிலான அரசியல் யாப்பு சீர்திருத்த மக்கள் பிரதிநிதித்துவக் குழு யாழ் மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வுகளை நேற்று 15.01.2016. யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு (தி. சிறீதரன்) தோழர் மோகன், தோழர் கிருபா ஆகியோர் மேற்படி அமர்;.வில் சமூகமளித்து பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். 40 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையில் வட கிழக்கு இணைப்பு அல்லது அதிகார பரவலாக்கத்திற்க்கான அலகு தொடர்பான கருத்துக்கள்.

வடக்கு-கிழக்கு மாகாணம் – அதிகாரப் பகிர்வுக்கான அலகு (மாகாணஅரசின் எல்லைப் பகுதிகள்)

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை தமிழ்மக்கள் கோருவதன் காரணம் தமது வாழ்வையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கும் தம் அரசியல் பொருளாதார சமூக இருப்பை பேணுதற்காகவுமே. நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட இன பாரபட்சங்களினாலும் தொடர்ந்து இடம்பெற்ற போரிpனாலும் ஏற்பட்ட துன்பங்களும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில் அரசும் அரச படைகளும் தமிழர்;கள் பாரம்பரிய வாழிடங்களில் முன்னெடுத்த திட்டமிட்ட செயற்பாடுகளும் தமிழ் மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. எங்களுடைய பார்வையில் தமிழர்களில் அதிகப் பெரும்பான்மையோரினது விருப்பும் வேட்கையும் ஒரு நிலையானதும் பாதுகாப்பானதுமான வாழ்வே. வடக்கு-கிழக்கு ஒருங்கிணப்பை மீள ஏற்படுத்துவதன் மூலமே தமிழ்ப் பேசும் மக்களுக்கு அரசியல் பொருளாதார மற்றும் சரீரரீதியான பாதுகாப்பை நிலைப்படுத்த முடியும்.. இதன் மூலமே ஒரு பலமான ஐக்கிய இலங்கை என்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் இலங்கைவின் சகல மக்களும் சேர்ந்து செயலாற்ற வழியேற்படும்;.

எனினும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடையே இருக்கும் நியாயமான எதிர்பார்ப்புக்கள் அச்சம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவை தொடர்பாக பின்வரும் வழிமுறைகளை பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்மொழிகிறது- இது அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் மாகாண மாவட்ட எல்லைகளில் சில மாற்றங்கள்; அருகாமையில் அமைந்திருக்கும் அம்பாறை தேர்தல் பிரிவை ஊவா மாகாணத்துடன் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும். இவ் விடயத்தில் வெலி ஓயா திட்டம் சம்பந்தமான பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

முஸ்லீம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த அரசியல் ஒழுங்குகள்

மத்திய அரசிலோ அல்லது மாகாண மட்டத்திலோ தங்களுடைய அபிலாஷைகளைப் பேணுவதற்கு அரசியல் அதிகாரப் பகிர்விற்கான இடைவெளி தங்களுக்கு இல்லா திருக்கின்றது என்ற முஸ்லிம் சமூகத்தினரது கவலை நியாயமானதே. மேலும் கடந்தகாலங்களில் எல.;.ரி.ரி.;ஈ.யினர் முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வந்துள்ள கொடுமைகளும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் அவர்களுடைய அச்சங் களுக்கான யதார்த்தங்களை உறுதிப்படுத்தியுள்ளன. இவற்றைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் மக்களைக் குறித்த தொரு விசேடமான நிலையாக நின்றுபிடிக்கக்;கூடிய அரசியற் தீர்;வொன்று இங்கு இன்றியமையாததாகியுள்ளது..

இதற்குரிய சாத்தியமான வடிவமைப்பானது கிழக்கில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையினராக கணிசமாக செறிந்து வாழும் பகுதிகளை மையமாக கொண்டதாக அமைய வேண்டும். இது சமூகங்களிடையே இருக்கும் பரஸ் பர சந்தேகங்கள் அச்சங்களைக் கருத்திற் கொள்வதோடு தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வழிமுறைகளேயன்றி சில பகுதியினரால் கோரப்படுகின்ற வகையாக வடக்கு-கிழக்கை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கை அல்ல.

முஸ்லீம் மக்களின் தெரிவிற்கு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்வைக்கும்; மாற்றுப் பிரேரணைகள்

வழிமுறை 1.

அம்பாறை மாவட்டம் முஸ்லிம் மக்களுக்கான ஒரு புதிய மாகாணமாக ‘தென்-கிழக்கு மாகாணம்‘ என- மீள்வரையறை செய்யப்படுவதுடன் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களும் வடமாகாணமும் ஒருங்கிணைந்த தனியான வட-கிழக்கு மாகாணம் பின்வருவனவற்றையும் கருத்திற் கொண்டு அமைக்கப்படுதல் வேண்டும்-

இம் மாகாணத்தில் வதியும் சிங்கள மக்கள் தாம் சிறுபான்மையினராகி விடுவார்கள் என்ற அச்சத்தை நீக்கும் முகமாக அம்பாறை தேர்தல் தொகுதி ஊவா மாகாணத்துடன் இணைவது குறித்து தீர்மானிக்கும் உரிமை வழங்கப்படுதல் வேண்டும்.
தென்-கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மை யாக உள்ள பிரதேச சபைப் பகுதிகள் குறித்து முஸ்லீம் தலைவர்கள் எவ்வாறான ஏற்பாடுகளை முன்மொழிவார்களோ அவை புதிய வடக்கு-கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேச சபைப் பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வழிமுறை 2

இத்தென்கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தோடு வடக்கு-கிழக்கில் உள்ள தொடர்பற்ற முஸ்லிம் பகுதிகளான

காத்தான்குடி
ஏறாவூர் நகரம்
வாழைச்சேனை நகரம்
கிண்ணியா
மூதூர்
எருக்கலம்பிட்டி

ஆகிய பிரதேச சபைகளின் பகுதிகள் நிர்வாக ரீதியாக இணைக்கப்படலாம். (இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி அரசுக்குட்பட்ட பகுதிகளைப் போல்)

இங்ஙனமான வடிவமைப்பில; இப்படிப்பட்ட பரஸ்பர ஒழுங்குகளை புதியவகையில் ஒருங்கிணைந்திருக்கும் வடக்கு-கிழக்கு மாகாணமும்; குறிப்பிட்ட தென்-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் பெரும்பான்மை யாகவுள்ள பிரதேசசபைப் பகுதிகளுடன் கொண்டிருத்தல் வேண்டும்.

பின்வரும் தொடர்ச்சியற்ற சில தமிழ்ப் பிரதேச சபைகள் அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்-

கல்முனை வடக்கு பாண்டிருப்பு நற்பட்டிமுனை என்பன அடங்கிய ( தமிழ் ) பிரதேச சபை.
காரைதீவு பிரதேச சபை
ஆலையடிவேம்பு பிரதேச சபை
தம்பிலுவில் – திருக்கோவில் பிரதேச சபை

வழிமுறை 3.

முழுமையாக இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்திற்குள் ஒரு முஸ்லிம் சபையினை உருவாக்கி அதற்கு அவசியமான குறிப்பிட்ட துறைகளில் அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கி அச்சபை அவ்வதிகாரங்களை முஸ்லீம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச சபைப் பகுதிகளில் செலுத்த வகை செய்தல். .

இங்கு மேலே பட்டியலிடப்பட்டுள்ள வழிமுறைகளில் எது உகந்ததெனத் தீர்மானிக்கும் உரிமை வடக்கு- கிழக்கிலுள்ள முஸ்லீம் மக்களுக்கும் அதன் சமூக- அரசியற் தலைவர்களுக்குமே உரியதாகும்.

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும்; தொடர்ச்சியற்ற பிரதேசங்கள் சம்பந்தப்பட்ட நெறி முறைகளுக்கான பரஸ்பர ஒழுங்குகளின் விபரங்களை தமிழ்த் தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் பேச்சு வார்த்தைகள் மூலம் வகுத்துக் கொள்ள வேண்டும். மற்றைய சமூகத்தின் பிரதேசத்திற்குள் அடங்கும் இன்னொரு சமூகத்தின் விவசாயநிலங்கள் பற்றிய ஒழுங்குகள் பற்றியும் இப்பேச்சுவார்த்தைகள் மூலம் நெறிமுறைகள் உருவாக்கப்படுதல் வேண்டும்.

தேசிய சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை ஜனநாயக அபிலாஷைகளையும் நலன்களையும் பேணும் முகமாக மாகாணங்களின் எல்லைகள் மீள் வரையறுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்..

நிலப்பரப்புகளை மீள் வரைதல்:

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பாக மக்கள் கருத்துக்கணிப்பொன்றை வைப்பதற்கான முயற்சி யானது பல்வேறு சமூகங்களிடையே பிரிவையும் பகைமை யையும் மேலும் ஆழமாக்கி விஸ்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கருத்துக்கணிப்பு பல பக்கங் ;களிலும் இருக்கும் தீவிர இனவாதசக்திகள் பதட்டங் களையும் அச்சங்களையும் கிளறிவிடுவதற்கே உதவும்.

மாகாண எல்லைகள் முன்னைய காலனித்துவ ஆட்சி யாளர்களால் நிர்வாக வசதிக்காக வரையறுக்கப்பட்ட பூகோளப் பகுதிகளேயாதலால் அவற்றில் புனிதம் எதுவுமில்லை. இந்த மாகாண எல்லைகளுக்கு அரசியல் அந்தஸ்து அளிக்கப்பட்டதே 1987ல் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் மூலந்தான்.

1957ம் ஆண்டின் பண்டா-செல்வா ஒப்பந்தமும; 1965ன் டட்லி-செல்வா ஒப்பந்தமும் அரச உதவிகளுடன் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களால் உருவாகிய இனங்களுக்கிடையேயான பதட்டங்களைத் தணிப்பதற் காகக் கருதப்பட்டவை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்ஒப்பந்தங்கள் அமுலாக்கப்பட்டிருப் பின் வடக்கு-கிழக்கைப் பிரிப்பதா அல்லது இணைப்பதா என்ற கேள்வியே எழுந்திருக்காது. வடக்கு–கிழக்கு இணைப்புக் கோரிக்கையானது அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் பாதகமான விளைவுகளைச் சமன் செய்வதற்காக எழுந்த ஒன்றே..

இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு 1970களிலிருந்து அரசினால் செயற்படுத்தப்பட்ட குடியேற்றங்களை கலைத்து விடுவதாக திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்காவும்; 1988ம் ஆண்டில் தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்..

அம்பாறை தேர்தல் பிரிவை அடுத்துள்ள மாகாணத்துடன் சேர்த்தல்;;

வடக்கு–கிழக்கு மாகாணத்திலிருந்து அம்பாறை தேர்தல் பிரிவைத் தனியாக்கி அதனது பொலீஸ் நிர்வாகம் நீதிமன்றநிர்வாகம் ஆகியவற்றை தற்போது கண்காணித்து வரும் ஊவா மாகாணத்துடன் இணைத்துவிடலாம் என்ற யோசனையை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். இங்கே முன்வைக்கின்றது.

அம்பாறைத் தொகுதியின் சிங்களப் பெரும்பான்மையானது சமூகங்களிடையே பதட்டங்களை சிருஷ்டிப்பதற்கும் தமிழ் மக்களதும் முஸ்லிம் மக்களதும் அடிப்படை அரசியல் இருப்பை நலிவாக்குவதற்கும் கருவிகளாக உபயோகிக்கப் படுவதனாலேயே மேற்குறிப்பிட்ட கோரிக்கை எழுகின்றது. மேலும் அம்பாறை தேர்தல் பிரிவிலுள்ள சனத்தொகையில் மிகப்பெரும்பன்மையானோர் அதே மாவட்டத்திலுள்ள மற்றைய பகுதிகளின் இனங்;களோடு ஓர் அர்த்தமுள்ள சமூக அரசியல் உறவைக் கொண்டிருக்கவுமில்லை.

வெலிஓயா திட்டத்தினை மீள்வடிவமைத்தல்

முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டத்திற்குள் உள்ளே அமைந்திருக்கும் வெலி ஓயா திட்டத்தின் நிலப்பகுதி மீள்வடிவமைக்கப்பட்டு அதன் மூலம; முன்னைய தமிழ்க் கிராமங்கள் 1984க்கு முன்னர் இருந்த நிலைமைக்கு மீளவும் கொண்டுவரப்படல் வேண்டும். பயன்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அரச நிலங்கள் அந்தந்த மாவட்டங்களில் நிலவிய இனவிகிதாசாரப்படி அந்தந்த மாவட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இங்கு பயன்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அரச நிலங்களில் உண்மையாகவே 10 வருடங்களுக்கு முன்னரே நிரந்தரமாகக் குடியேறி அதேவேளை தமது முன்னைய கிராமங்களில் நிலமோ வீடோ இல்லாது இங்கு வதியும் சிங்கள விவசாயக் குடும்பங்கள் மட்டும் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து சட்ட ரீதியாக வாழ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

திருகோணமலை எல்லைக் கிராமங்களை மீள்வரை செய்தல்

இனங்களுக்கிடையேயான சனத்தொகை விகிதங்களை அரச உதவியுடனான திட்டமிட்ட குடியேற்றங்கள் திருகோணமலை மாவட்டத்திலும் மிகப் பாரிய அளவில் பாதித்துள்ளன. 1950களில் அல்லை-கந்தளாய் பகுதிகள் முழுவதுமே பெருமளவில் சிங்களப் பகுதிகளாக மாற்றப்பட்டதுடன் 1976இல் திருகோணமலை மாவட்டத்தில்; சேருவாவில தேர்தல் தொகுதி; உருவாக்கப்பட்டது. 1960களிலும் 1970களிலும் திருகோணமலை நகரிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள்; விஸ்தரிக்கப்பட்டன.

ஆனாலும் இப்பகுதிகளில் தற்போது வாழும் சிங்கள மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குலைக்கும் எதுவித நடவடிக்கைகளையும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரவில்லை. எனினும் அத்திட்டங்களினால் விளைந்த பாதகங்களினைக் கருத்திற் கொண்டு செயற்படுவதற்கான தீர்வுகளாக பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பின்வருவனவற்றை முன்மொழிகிறது-

திருகோணமலை பொலநறுவை மாவட்டங்களின் எல்லைப் பிரிவுகளில் உள்ள சிங்களமக்களைப் பெரும்பான்மையாக கொண்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள்; அடையாளம் காணப்பட்டு அவை வட-மத்திய மாகாணத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.; அதே வேளையில் இப்படியான மீள்சரிசெய்தல; வவுனியா முதல் திருகோணமலையினதும் திருகோணமலை முதல் மட்டக்களப்பினதும் ஒருங்கிணைந்த வடக்கு–கிழக்கு மாகாண நிலப்பரப்பின் தொடர்ச்சிக்கு இடையூறாக இருக்காது என்பது நிச்சயப்படுத்தப்பட வேண்டும்.

கிழக்கின் எதிர்காலம்

வடக்கு–கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பிற்காக ஆரம்பம் தொட்டு இருந்து வரும் முதலானதும் நியாயமானதுமான காரணமும் அதற்கான தற்போதைய தேவையும் அப்பிரதேசத்து மக்கள் யாவரும் குறிப்பாக தமிழ் மக்கள்; தாங்கள் காலாகாலமாக வாழ்ந்துவரும் தமது சொந்த இருப்பிடங்களில் சமாதானம் ஜனநாயகம்; ஸ்திரம் ஆகியவை நிலவ வேண்டும் என்பதேயாகும். வெளியேற்றப் பட்ட சகல தமிழ் மக்களும் முஸ்லீம்; மக்களும் மறுபடி யும் அவரவரது பாரம்பரிய வாழ்விடங்களில் குடியேற்றப் பட்டு அவர்கள் தங்கள் சுயநம்பிக்கையை மீண்டும்; பெற்றதன் பின்னர் கிழக்கின் தமிழ்-முஸ்லிம்;-சிங்கள தலைவர்கள்; ஒருங்கிணைந்து கலந்தாலோசித்தும் கிழக்கின் எதிர்காலம் பற்றித் தீhமானிக்கலாம்.

ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கே இலங்கையின் ஐக்கியத்தை வலுவாக்கும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் ஏற்பாடுகள் ஓர் ஐக்கிய இலங்கைக்;குள் சிறுபான்மையான தேசிய சமூகங்களின் பாதுகாப்பிற்கும; அவர்களுடைய நலன்களையும் அபிலாஷைகளையும் பேணி வளர்ப்பதற்கும் அவசியம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டியது பிரதான மானதாகும். எனவே தீர்வுகளை அணுகும் பொழுது அநேகரால் விரும்பப்படும் அரசியல் கட்டமைப்புக்கான தீர்வானது ஒரு தனிநாட்டை சிருஷ்டிக்க முயற்சிப்பவர்களிடம் கையளிக்கும் நோக்கிலான ஒன்றல்ல அவ்வாறான எண்ணத்துடன் அணுகுவது ஒரு நியாயமான அரசியற் தீர்வை காணும் முயற்சியில் தவறுகளையே உண்டாக்கும்;.

பன்முகப்பட்ட அரசியல் வழிமுறைகளின் மூலம் மக்களின் பல்வேறு பகுதியினரதும் வௌ;வேறுபட்ட நலன்களை சமமாகத் திருப்திப்படுத்துவதுடன்; நாட்டின் ஐக்கியத்தை யும் இறைமையையும் பேணி வளர்த்து இலங்கையை ஒரு பல்லின மக்களின் ஐக்கிய தேசமாக உருவாக்குவதே. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தூர நோக்காகும். இவ்வண்ணமான ஓர் அரசியற் தீர்வானது முரண்பாடுகளுக்கு எதிராக இயங்கி யுத்தத்தை நலிவடையச் செய்து சமாதானமும் ஜனநாயகமுமான சூழ்நிலையை நிலைநிறுத்தி சகல சமூகத்தினரதும் நாடு முழுவதற்குமான சுபீட்சத்திற்கு வேண்டிய கட்டுமானங்களையும் பாரம்பரியங்களையும் கட்டியெழுப்பல் வேண்டும். எந்தத் தீர்வும் எல்லாக் குழுவினரையும் ஒரே சமயத்தில் திருப்திப்படுத்த முடியாது. எனினும் நியாயமானதும் நீதியானதுமான தீர்வொன்றினைக் கண்டு அதனை நம்பிக்கையுடனும ஊக்கமுடனும் எல்லோரும் ஒருங்கிணைந்து செயலாற்றி ஸ்தாபிப்பதன் மூலந்தான் பலதரப்பிலும் இருக்கும் தீவிரவாத சக்திகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடமுடியும்.

சிங்கள மக்களின் நலன்களில் நேர்மையானதும் உண்மையானதுமான அக்கறையும் அதேவேளை தமிழ் மக்களுக்கு எதுவித பங்கமும் ஏற்படுவதை விரும்பாத சிங்களத் தலைவர்கள் இத்தகைய ஒழுங்குகளையே உசிதமாகக் கொள்வார்கள் என பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் எதிர்பார்க்கின்றது. சிங்களமக்களின் தலைவர்கள; கடந்த காலத்தையும் சமகாலத்தையும் புரிந்துகொண்டு; இலங்கை யினது சகல மக்களிதும் நலன்களுக்காக விவேகத்துடனும் துணிவுடனும் உறுதியுடனும; நியாயமானதும் நீதியாதுமான ஓர் அரசியற்தீர்வை அளிப்பார்கள் என்பதே தமிழ்மக்களது எதிர்பார்ப்பாகும்.

இலங்கைவில் நிலவும் சமூக அரசியல் வளர்ச்சியின் யதார்த்தங்களையும் தமிழ்மக்களின் நிலைமைகளையும் புரிந்துகொள்ளும்படி தமிழ்மக்களின் தலைவர்களையும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ.; வேண்டுகிறது. நாகரீகம் அறிவு பொறுப்பு ஆகியவை வாய்ந்த எந்த மனிதனுமே இரத்த தாகம் கொண்ட யுத்த வெறியர்களுக்கு உதவக் கூடாது. சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் எட்டுவதற்கு விட்டுக்கொடுப்புகள் இணக்கப்பாடு கருத்தொற்றுமை ஆகியவற்றுடன் பரஸ்பர அபிலாஷைகள் மற்றவர்களுடைய அச்சங்கள் ஆகியவற்றையும் அங்கீகரிப்பது முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமாகும்.

தேசிய சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை ஜனநாயக அபிலாஷைகளையும் நலன்களையும் பேணும் முகமாக மாகாணங்களின் எல்லைகள் மீள் வரையறுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்..