மாணவச் செல்வங்களுக்கு அஞ்சலி

(சாகரன்)

மூச்சை நிறுத்தி…… புத்தகத்தை காக்க உயர்ந்த கரங்கள்…

(செய்தி: குறிஞ்சாங்கேணி/கிண்ணியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி பலர் மரணம்)

சின்னஞ் சிறு

கரங்களினிலே

சிறு புத்தகம்

காவி

பெருங்கனவு சமைக்க

பள்ளி சென்ற

என் பாலகனே

உன் கால்கள்

துள்ளி ஓடா

இடமுண்டோ

துரு துருவென்றிருந்த

உன் கண்கள்

உறங்காதோ

நீச்சலிலும் நீ

சூரன் அன்றோ

அந்த கொடிய

சுழி நீர்

உன்னை காவு கொண்டதோ

கரம் கொடுத்து

கல்வி கொடுக்கும்

ஆசிரியரும்

தத்தளிக்கும் உன்னைக்

காப்பாற்ற

ஆவலக் குரல் எழுபியதோ

வாப்பாவும் உம்மாவும்

கரையில் நின்று…

கடலில் பாய்ந்து

உனைக்காப்பாற்ற

முனைந்தனவோ

மூன்று நிமிட

மூச்சடக்கும் திறன்

மூளையை

சாவடையச் செய்தனவோ

என் பிள்ளையே

என் கால்களும் கரங்களும்

துடிக்கின்றது

அருகில் இருந்தால்

நான் அந்த ஆழியில்

பாய்ந்து

காத்து இருக்க மாட்டேனோ

என் காலம்

முடிவை நோக்கி

வந்து கொண்டிருக்கின்றது

அந்த முடிவை

உன் உயிர்காப்பதில்

விடுதல் ஒன்று இழப்பு இல்லையே

இது என் குரலின் குரலல்ல

பலரின் குரல்

கடல் வண்டி கட்டி

சுழி ஓடி

சுற்றிச்சுற்றி ஓடி

காப்பாற்றிய

அந்த பெருமக்கள்

பெருமானாரின் அவதாரங்களே

இனி ஒரு வள்ளம்

இது போல் வேண்டாம்

இருக்கும் பாதையை

செப்பனிட முன்பு

கடல் வழிப் பாதை

சரி செய்திருக்க வேண்டாமோ

அதிகாரம் கண்ணை மூடிவிட்டதோ

கிழக்கின் அடையாளம்

காத்தான் குடி என்பார்

நான் சொல்வேன்

அது கிண்ணியா என்று

பால்ய வயதில்

கடல் கடந்து

அங்கு வந்த போது

நான் பரிதவித்ததும்

நினைவில் வந்து போனதே

கூட வந்த

தாத்தாவும்

தன்னுயிர் பிரிய முன்பு

பல கரம் பற்றி

உன்னை காப்பாற்ற

நீச்சல்தான் அடித்திருப்பார்

கால்களிலும் கைகளிலும்

வலுக் குறைக இருந்திருந்தாலும்

அந்த வாப்பாவிடம்

இருந்திருக்குமல்லோ

மனவலிமை

தன் பேராண்டியை

காப்பாற்ற

இறுதி மூச்சு வரை

இரைஞ்சிருப்பாரல்லவோ

அந்த கோணேசர்

குமரனுக்கும்

இந்த அவலக் குரல்

கேட்கவில்லையோ

மயிலில் பறந்து வந்து

தன் சிறகில் இருத்து

உன்னை காத்தருளி

மத நல்லிணத்தை

காத்திடவில்லையே

அந்த வகையில்

அந்த குமரன் மீது

எனக்கு

தீராத கோவம்தான்

உன் சன்னதியிற்கு

அடுத்த முறை

வரும் போது

இதற்கு நியாயம் கேட்க

எனது காக்க தோழருடன்

இணைந்தே வருவேன்

புராணம் பாடி

என்னை சமாதானப்படுத்தலாம் என்று

நினைக்காதே

எமது கண்ணீருக்கு

கதை சொல்வதை விடுத்து

காரியத்தை ஆற்று

எம் பிள்ளைகள்

பாதுகாத்து கடல் கடந்து

கற்பதற்கு

அடுக்கி வைத்த புத்தகங்களாக

வெள்ளைத் துணியால்

உங்கள் வெள்ளை ஆடை

உடலம் மறைத்த

அந்த புகைப்படம்

ம்…… வேறு என்ன சொல்ல

இறுதி மூச்சிலும்

உன் புத்தகத்தை

காப்பாற்ற

நீ உயர்த்திய கரத்தை

நான் அறிவேன்

என் செல்வங்களே…….!