35-1. 2008 செப்டம்பரில் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்சின் பொறிவுடன் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியானது ஒரு காலகட்டத்திற்குரிய பொருளாதாரச் வீழ்ச்சி அல்ல, மாறாக முதலாளித்துவ ஒழுங்கின் அடிப்படையான நிலைமுறிவாகும். நிதிய முறைமைக்கும் பிரதான கூட்டுத்தாபனங்களுக்கும் முண்டு கொடுப்பதற்கு, அரசாங்கங்களால் உட்செலுத்தப்பட்ட டிரில்லியன் கணக்கான டொலர்கள் பொருளாதார அமைப்பினை மறுஸ்திரம் செய்து விட்டிருந்ததாகத் தோன்றிய நம்பிக்கைகள் எல்லாம் துரிதமாக மறைந்துவிட்டன. இந்த பிணையெடுப்புகளும் ஊக்குவிப்புப் பொதிகளும், உண்மையில் தனியார் சுரண்டல்காரர்கள் மற்றும் ஊக வணிகர்களின் மலை போன்று குவிந்திருந்த திரும்பிச் செலுத்தமுடியாத கடனை, அரசாங்கக் கணக்கிற்கு மாற்றி விட்டு, இப்போது ஒவ்வொரு நாட்டிலும் சிக்கன நடவடிக்கைகளின் வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இன்னும் விரிந்து சென்று, பெரும் ஆபத்தான வடிவங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான நிக் பீம்ஸ் விளக்கியதாவது: “நிலைமுறிவு என்றால் முதலாளித்துவம் தீடீரென இயங்காது நின்று போய் விடுகிறது என்று அர்த்தமல்ல. இது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டம் திறப்பதை அடையாளப்படுத்துகிறது, இதில் பழைய கட்டமைப்புகளான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளும் மற்றும் அத்துடன் சித்தாந்தங்கள் மற்றும் சிந்திக்கும் வழிவகைகளும் சமுதாயத்தின் தலைவிதியை தானே முடிவெடுக்கும் புதிய வகையிலான அரசியல் போராட்டம் அபிவிருத்தியடைவதற்கு பாதையை திறந்து விடுகின்றன.”[71]