புதிய அரசியலமைப்புக்கு பொது மக்களின் அபிப்பிராயங்களை அறியும் குழுவினர் யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 15,16ஆம் திகதிகளில் தமது செயலமர்வுகளை நடத்தியிருந்தனர். ஏனைய மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணத்தில் மிக அதிகமானவர்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருகை தரவில்லை. இந்த ஏமாற்றத்தை இந்தக் குழுவின் செயலமர்வுகளை கண்காணிக்கும் அமைப்பினர் வெளிப்படுத்தினர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கருத்தறியும் செயலமர்வு தொடர்பாக பொது மக்களுக்கு போதுமான வகையில் அறிவுறுத்தல்கள் விடுக்கப்படவில்லையா? அல்லது ஊடகங்கள் இந்தச் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லவில்லையா? அல்லது மக்களுக்கு இவ்விடயத்தில் அக்கறையில்லையா? என்றவிதமான கேள்விகளை அவர்கள் தொடுத்தார்கள். புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் தமிழ் மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்பதை அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புக்களும் அக்கறையோடு பரப்புரை செய்யவில்லையா? என்ற கேள்விகளும் எழுந்தன. இரண்டு நாட்களிலும் சுமார் 180 முன்மொழிவுகளே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இதில் அரசியல் கட்சிகள் நான்கும், விவசாயம், கடற் தொழில், போன்ற தொழில் சார்பு அமைப்புக்களும், ஒரு சில பொது அமைப்புக்களும் அடங்குகின்றன. ஏனையோர்; கல்வித்துறை சார்ந்தவர்களாகவும், தனிநபர்களுமே உள்ளடங்கியிருந்தனர். ஆனால் தேர்தல் வந்துவிட்டால், யாழ்ப்பாணத்தில் ஐம்பது சுயேட்சைக் குழுக்கள் பெயர்ப்பட்டியலை சமர்ப்பித்திருப்பார்கள். பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியில் குதிப்பார்கள். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் அதிகபட்சமான கருத்துப் பதிவை முன்வைப்பதன் ஊடாக அரசுக்கு புறந்தள்ள முடியாத அழுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கு அந்த சுயேட்சைக் குழுக்களைக் காணவில்லை.
அவர்கள் எங்கே போய்விட்டார்கள்? தேர்தல் வேளையில் மட்டும் யாழ்ப்பாணத்தில் முளைத்து விடுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, போன்ற கட்சிகளும் தமது முன் மொழிவுகளை முன்வைக்கவில்லை. ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, சமாசமாஜக் கட்சி, தமிழர் மகா சபை, போன்ற கட்சிகள் தமது முன் மொழிவுகளை அந்தக் குழவிடம் இந்த அமர்வுகளில் முன்வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. தேசியக் கட்சிகளின் பட்டியலில் போட்டியிட்டாலும் யாழ்ப்பாண மக்களிடையே அரசியல் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன், விஜயகலா ஆகியோர், தேர்தல் வேளையில், தமது கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும், கருத்துக்களையும்
யாழ்ப்பாண மக்களிடம் விநியோகிப்பதை விடவும், யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்றதான கருத்துக்களை உள்ளடக்கி, தமிழ் மக்களின் தேசிய நிலைப்பாட்டை உள்வாங்கி தனியான தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிப்பார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு கொழும்பிலிருக்கும் தமது கட்சியை நோக்கியே கேள்விகளை கேட்பார்கள். அப்படியானவர்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் தமிழ் மக்கள் சார்பில் தனியான யோசனைகளை, தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் விதமாக தயாரித்து அதை யாழ்ப்பாணத்திலிருந்து பகிரங்கமாக முன் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் முன் வைக்காததற்கு காரணம் என்ன? தாம் அங்கம் வகிக்கும் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடே தமது நிலைப்பாடும் என்று இவர்கள் இருந்துவிட்டார்களோ என்று தமிழ் மக்கள் கருதுகின்றார்கள்.
தமிழ் மக்கள் பேரவை ஊடகங்களுக்காக ஒரு அரசியல் வரைபு ஆலோசனையை முன் வைத்திருந்ததே தவிர அதை எங்கே யாரிடம் முன்வைக்க வேண்டுமோ? அதை அவர்கள் செய்யவில்லை என்பதும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எழுத்து வடிவில் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கவில்லை. ஆனால் உச்சபட்சமான சமஷ்ட்டித் தீர்வு என்றும், இணைந்த வடக்கு கிழக்கு ஒரு அலகு என்றும் கூறிவருகின்றார்கள். இதுநாள்வரையும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதில் இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கி முன்னேற வேண்டும் என்றும் கூறிவந்த ஈ.பி.டி.பிக் கட்சி, தமது முன் மொழிவுகளில் தமிழ் மக்களுக்குத் தீர்வாக சமஷ்ட்டி அடிப்படையில் இறைமை பகிரப்பட வேண்டும் என்றும், இணைந்த வழக்கு கிழக்கை ஒரு நிர்வாக மாநிலமாக அமைக்க வேண்டும் என்றும் கூறியிருப்பது ஆச்சரியாமாக இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வு என்கிறது, கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் கொள்கையுடையவர்கள் என்று கூறிக் கொள்வோரும் சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வு என்கிறார்கள். இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு சமூக அமைப்புக்களும், தனி நபர்களும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் வலியுறுத்திய கருத்துக்களைக் கேட்டு, கருத்தறியும் குழுவினரே அதிர்ந்து போயிருப்பார்கள். இதுவரையிலும் கருத்துக்களை பதிவு செய்துள்ள தமிழ் மக்களில் நூறு விகிதமானவர்களும் தமக்கான அரசியல் தீர்வானது மத்திய அரசுகளால் பறிக்கப்பட முடியாததும், தமிழர்களை தமிழர்களே ஆட்சி செய்யக் கூடியதுமான சமஷ்ட்டித் தீர்வையே முன் வைத்திருக்கின்றார்கள். குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் சமஷ்ட்டி என்பதையும் தாண்டி தனி நாட்டுக்கு ஒப்பான தீர்வே அவசியம் என்பதை உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்திருக்கின்றார்கள்.
அந்த மக்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிப் பிரவாகத்தைப் பார்க்கும்போது, ‘இத்தனை உயிரிழப்புக்களுக்கும், அழிவுகளுக்கும் பிறகு இனிமேல் இவர்கள் தனி நாடு கேட்க மாட்டார்கள், பிடிவாதமான உரிமைக் கோரிக்கைகளை முன் வைக்கமாட்டார்கள், அரசுகள் கொடுப்பதை பெற்றுக் கொண்டு அடங்கிப் போய்விடுவார்கள்’ என்று எண்ணியிருந்த சிங்களத் தலைமைகளுக்கு நிச்சயம் எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கும் அத்துடன், தனி நாட்டுக்கான வேட்கையும், தட்டிப் பறிக்க முடியாதவாறான தமிழருக்கான உரிமையுமே எங்கள் கோரிக்கையாகும். மரணங்களும், இரத்தமும் எங்கள் உணர்வுகளையும், உரிமைக்கான உறுதியையும் எங்களிடமிருந்து பறித்துவிடாது என்பதுபோல் அந்தக் கருத்துக்கள் காணப்பட்டது.
இன்னும் சிலரோ, புதிய அரசியலமைப்பு திருத்தம் அதனூடாக தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சனைக்கு தீர்வு என்பதெல்லாம் நடக்குமா? நீங்கள் எங்களிடம் பெற்றுக் கொள்ளும் கருத்துக்களை மாற்றம் செய்யாமலே அரசிடம் தெரிவிப்பீர்களா? எப்போது உங்கள் அறிக்கை வெளியிடப்படும்? உண்மையில் தீர்வைத் தருவீர்களா? அரசாங்கம் இதுநாள்வரை நடத்திய நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடுமா? நீங்கள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்குள் தென் இலங்கை அரசியலில் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்து இவையெல்லாம் காற்றில் பறந்துவிடுமா? தற்போதைய அரசு தொடர்ந்தும் இவ்வாறே நல்லிணக்க அரசாக இருக்குமா? அல்லது கட்சி அரசியல் முரண்பாடுகளால் தற்போதைய அரசு ஆட்டம் காணுமா? என்றெல்லாம் பலவிதமான கேள்விகளைத் தொடுத்திருக்கின்றார்கள்.
மக்களின் சில கேள்விகள் ஆச்சரியம் தருபவையாகவும், சில வேளைகளில் கோபம் தருபவையாகவும், பல வேளைகளில் தமிழ் இனவாதமாகவும் வெளிப்பட்டபோதும், இந்தக் குழுவினர் தமது சுய விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்டாமல் மிகவும் பொறுமையோடு கருத்துக்களை பதிவு செய்ததையும், சில கருத்துக்களில் காணப்பட்ட மயக்கங்கள், தெளிவின்மைகள், வரம்புகள் என்பவற்றை மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு தெளிவுபடுத்தியமையை பாராட்ட வேண்டும். எதிர்பார்க்கப்பட்டதைப் போல் இன்னும் பெருந்தொகையான தமிழ் மக்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
அப்போதுதான் தமிழர்களின் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதே தவிர, தமிழ் மக்களின் போராட்ட குணமும், உணர்வும் தோற்கடிக்கப்படவில்லை. அதைத் தோற்கடிக்கவும் முடியாது என்பதை இன்னும் உரக்கப் பதிவு செய்திருக்கலாம். எதற்காக தமிழர்கள் இலங்கை மண்ணில் உரிமை கோரிப் போராடினார்களோ அந்தக் காரணிகளும், அந்தப் புறக்கணிப்புக்களும் கண்டறிப்பட்டு உரிய தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமலும், தமிழர்களின் வரலாற்றை ஆராயாமலும் மேலோட்டமாக எதையாவது தீர்வு என்று கூறி தமிழ் மக்களிடம் திணிக்க அரசுகள் முற்படக் கூடாது என்தையே இதுவரை தமது கருத்துக்களை பதிவு செய்த ஒவ்வொரு தமிழரின் உணர்வுகளும் வெளிப்படுத்தியுள்ளது.
(ஈழத்துக் கதிரவன்)