கழுதை சுதந்திரம் என்றால் என்ன என்று தீர்மானிப்பதற்கு கழுதைக்கு சந்தர்ப்பம் வழங்கினால் என்னவாகும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பினார். கழுதை சுதந்திரம் சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதில் வழங்கும் விதமாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் உரையாற்றும்போது, முதலில் இந்த கழுதை சுதந்திரம் எனும் கதையே ஒரு கழுதைக் கதை என்பதை கூறிக்கொள்ளவேண்டும் என்றார்.
மிருகவேட்டை குறித்து கதை எழுதுவதற்கு மிருகங்களுக்கு உரிமை வழங்கினால் அந்தக் கதை எவ்வாறு எழுதப்படும்? அதுபோன்று தான் கழுதை சுதந்திரம் என்றால் என்ன என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் உரிமையை இன்று யார் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு யாருக்காவது உரிமை இருக்கின்றதா? இது தான் சுதந்திரத்தின் எல்லை. இதற்கு அப்பால் கழுதை. அதற்கு இங்கே சுதந்திரம் என்று தீர்மானிக்க முடியுமா? அரசியல்வாதிகள் இவ்வாறு வரையறுப்பது தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கே. தமது அரசாங்கத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுமாயின் விமர்சனம் செய்யும் உரிமையை பறிப்பதற்கும் அதற்கு வேலி போடுவதற்குமே. ஒரு நாட்டின் நாகரீகம் மற்றும் சமூக அங்கீகாரம் இருப்பது அந்நாட்டில் உள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் மூலமே என்றார் வாசுதேவ நாணயக்கார.