(ஆசி கந்தராஜாவின் டயறிக் குறிப்பு)
யாழ்ப்பாணத்தில், 1960ம் ஆண்டுகள் வரை தோட்டத்தில் பட்டை இறைப்பு.
பல தோட்டங்களுக்கு நடுவில், ஒரு பொதுவான கிணறு இருக்கும். பட்டை இறைப்புக்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். விவசாயியான எனது பெரிஐயாவின் தண்ணி இறைப்புக்கு துலா மிரிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிரிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும், நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிரிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது. இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப் பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு, இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.