தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3)

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள். இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை.

இவர் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி சாவகச்சேரியில் கால்பதித்திருக்க முடியாது.காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனங்களை தன் நண்பர் அய்யாவின் நட்புக்காக முறியடிக்க உதவியவர்.இவரின் உடல் பலத்துக்கும் துணிவுக்கும் எல்லோரும் அஞ்சி நடந்தனர்.பல எதிரிகள் இவரை பொலிஸ்காரன் போல கண்டு ஓடினர்.

எமது ஊரில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த விதானை ஒருவர் மகன் கோவியரகளோடு ஏற்பட்ட தகராறில் ஒரு கோவியரை அடித்துக் கொலை செய்து விட்டார்.அங்கே கோவியரை யாரும் பகைத்து வாழ முடியாது.கொலை செய்தவர் தலை மறைவாகிவிட்டார்.அங்கே வெள்ளாளர் ஒருவர் இறந்துவிட அவரின் சடலத்தை சுடலைக்கு எடுத்துச்செல்ல கோவியர்கள் தடுத்தனர்.வெள்ளாளரால் அவர்களை மிஞ்ச முடியவில்லை .அவரகளில் வரதர், என்பவர் இரத்தினத்திடம் கள் அருந்துபவர்.அவர் மூலமாக இரத்தினத்தின் உதவியை வெள்ளாளர் நாடினர்.

இரத்தினம் தனியாக அங்கு சென்று பிணத்தை அவர்கள் காவிவர அவர் முன்னே சுடலைவரை சென்று ஈமக்கிரியைகளை முடிக்க உதவினார்.எவரும் ஒரு எதிர்பைக் கூட காட்ட துணியவில்லை.

இப்படி இன்னும்பல கதைகள் அவரைப் பற்றி ஊரில் உண்டு.அன்றைய பல போராளிகள் மந்துவில் என்றாலேயே இரத்தினத்தை விசாரிப்பார்கள்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)