“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நீங்கள் ஏறத்தாழ 72 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?’’
“சிறுவயதில் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தேன். `வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் உள்பட ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றேன். 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் எனச் சென்றபோது, என்னை அவர்கள் சேர்க்கவில்லை. `பதினெட்டு வயது இருந்தால் தான் சேர்ப்போம்’ என்றார்கள். அந்த வயது வந்ததும் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டேன். இது நடந்தது 1943-ம் ஆண்டில். சுதந்திரத்தின் பலன் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றுதான் போராடினோம். பாரதி பாடல்களும், திரு.வி.க எழுத்துக்களும் என்னை மாற்றின. சாதிக் கட்டமைப்பை உடைப்பது, சுரண்டல் இல்லாத சமுதாயம் அமைப்பது போன்றவைதான் என் லட்சியமாக இருந்தன. இப்போது வரைக்கும் அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இது எனக்குச் சோர்வைத் தரவில்லை. மிக நல்ல பயணமாகவே அமைந்தது. மக்கள் உரிமைக்காகப் போராடியது, மனிதகுல மாற்றத்துக் கான போராட்டங்களை முன்னெடுத்தது என சிலவற்றைச் செய்திருக் கிறேன். இந்தப் பயணம் தொடர வேண்டும். இதுவரைக்கும் என் பயணம் வீணாகவில்லை என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது.”
“ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் ஆக உங்கள் பணிகள் நிறைவைத் தந்தன என எடுத்துக்கொள்ளலாமா?’’
“அப்படிச் சொல்ல முடியாது. சாதிக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடி சில அழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றியி ருக்கிறோம் என்பதில் திருப்தியடைகிறேன். இன்னும் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். பாதை மிகக் கடுமையாக இருக்கிறது. நிறைவு என்ற ஒரு வார்த்தையில் அதை நிரப்ப விரும்பவில்லை.”
“ `வியட்நாம் நாட்டின் தலைவர் ஹோசிமின் என் ரோல்மாடல்’ என்று முன்பு ஒருமுறை சொன்னீர்கள். அவர்கூட மரணிக்கும் தருவாயில், ‘என்னால் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ முடியவில்லை’ என்றார். அவ்வளவு கடினமானதா இந்தப் பாதை?’’
“நிச்சயமாக… எல்லா நேரத்திலும் நேர்மையாக இருந்து, தவறுகளுக்கு எதிராகப் போராடுவது மிகக் கடுமையான பாதைதான். `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றுதான் வள்ளுவர் சொல்கிறார். ஹோசிமின் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது போராட்ட வாழ்க்கை அற்புதமானது. ஒருமுறை காந்தி சமாதிக்கு வந்து பார்த்தவர், ‘எங்கள் நாடுகளில் ஏழை, பணக்காரர் வேற்றுமை உள்ளது. இந்தியாவில் சாதி, மத வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரையும் ஒன்றுதிரட்டி சுதந்திரத்துக்குப் போராடி வெற்றிபெற்றது மிகப் பெரிய விஷயம்’ என்றார். இன்றைக்கும் எனக்குப் பிடித்த தலைவர் ஹோசிமின்தான்.”
“தியாகம் இல்லாமல் எதையும் சாதித்துவிட முடியாது எனச் சொல்கிறீர்கள். அந்தத் தியாகங்களுக்கு மக்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால் சோர்வு வரத்தானே செய்யும்?’’
“ஒரு சிக்கலுக்கு நிலையான தீர்வு கிடைக்கும் வரை போராடுவது, அதன் மூலம் வரும் இழப்புகளை எதிர்கொள்வது, தாங்கிக்கொள்வது… இதுதான் தியாகம். இதை மக்கள் அங்கீகரிக்க வேண்டும், வரலாற்றில் தனது தியாகம் நினைவுகூரப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. அங்கீகாரத்தை எதிர்பார்த்து பொது வேலையில் ஈடுபடக் கூடாது.”
– Vikatan EMagazine