சுவிட்சர்லாந்தில் நீண்ட காலமாக வாழும், வதிவிட அனுமதி பெற்ற தமிழர்களையும், பிற வெளிநாட்டவர்களையும், இலகுவாக நாடுகடத்துவதற்கான சட்டத் திருத்தம் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. பெப் 28 நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், சட்டத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால், அது அங்கு வாழும் தமிழர்களையும் பாதிக்கும். இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் வாழும் தவராஜா சண்முகம் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்:
//சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட சுவிஸ் நாட்டவரை அச்சுறுத்தும் வகையிலான வாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டால் சுவிஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட பிரசைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் “கண்ணில் விளக்கெண்ணையை விட்டவாறே” சீவிக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கப் படுகின்றனர். சாதாரண குற்றச்செயலைப் புரிந்தால் கூட சம்பந்தப்பட்ட நபர் தனது சொந்த(?) நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
இதில் சுவிஸ் நாட்டிலேயே பிறந்த – தனது தாய் நாட்டைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத – பிள்ளை கூடப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்தகைய அபாயம் குறித்த சட்டத் திருத்தத்தில் இருந்தாலும் வாக்களிக்கத் தகுதி பெற்ற பல வெளிநாட்டவர்கள் இது பற்றி அக்கறை அற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். இதில் தமிழர்களும் அடக்கம்.
பொதுவாகவே ஈழத் தமிழர்கள் உள்நாட்டு அரசியலில் அக்கறை அற்றவர்களாகவே இருந்து வருவது கண்கூடு. அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறாமை, தேர்தலில் வாக்களிக்காமை, நாட்டு நடப்புக்களைத் தெரிந்து கொள்ளாமை என அவர்களின் அக்கறையின்மை பல வழிகளிலும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.
தாமுன்டு, தமது வேலையுண்டு என இருக்கும் இத்தகைய போக்கு தம்மைப் பாதிக்கும் ஒரு சூழ்நிலையிலும் கடைப்பிடிக்கப்படுவது என்பது சுத்த முட்டாள்தனம்.
ஒரு சில அதிமேதாவிகள் ‘குற்றவாளிகளைத்தானே சட்டம் பாதிக்கும், எங்களை அது ஒன்றும் செய்து விடாது. ஆகவே, இந்தச் சட்டத்தை நாங்களும் ஆதரிக்கப் போகிறோம்” என வீரவசனம் பேசி வருகிறார்கள். இவ்வாறு பேசுவோர் குற்றச் செயல்கள் என்று உத்தேச சட்டத்தில் அடங்கும் விடயங்கள் என்ன என்பதைக் கூட அறியாதவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.
குற்றச் செயல்கள் எனப் பொதுவில் நாங்கள் கருதாத குடும்ப வன்முறை, சீட்டு மோசடி, அடிதடி தகராறு, விபத்து, வரி ஏய்ப்பு, தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட பலவும் நாளை எங்களுக்கு எதிரான குற்றங்களாக மாறி நாமோ அல்லது எமது பிள்ளைகளோ அன்றி ஒட்டுமொத்தக் குடும்பமுமோ நாடு கடத்தப்படும் சூழல் இந்த வாக்கெடுப்பின் விளைவாக உருவாகலாம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டு வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைத்துத் தமிழ் மக்களும் பெப்ரவரி 28 ஆம் திகதி வாக்கெடுப்பில் இல்லை என வாக்களிக்க வேண்டும்.//
(நன்றி: தவராஜா சண்முகம்)