யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை, கட்டுகஸ்தோட்டை, மன்னார், மற்றும் திருகோணமலையில் வழக்கத்தை விடவும், 3 பாகை செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை காணப்பட்டது. இதனைவிட இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்தை விட சுமார் 2, 3 பாகை செல்சியஸ் அதிகமாகவே காணப்பட்டதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நேற்றைய தினம் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.