நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் நல்லாட்சி ஏற்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டம் நல்லாட்சி நிர்வாகத்தை கொண்டிருக்கவில்லை மட்டக்களப்பில் இப்போதும் மகிந்தராஜபக்சஸ அரசின் ஆட்சியே நடைபெறுவதாக பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக மட்டக்களப்பில் அரச நிர்வாகம் சரியாக செயற்படவில்லை, அனைத்து நிர்வாகங்களிலும் அரசியல் தலையீடு காணப்படுவதாக வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு இதுகுறித்த கருத்துக்களை லங்காசிறியின் 24 மணிநேரச் செய்திச் சேவை பொதுமக்களிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் மேலும் கருத்துதெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதும் மகிந்தராஜபக்ஸவின் ஆட்சியே நடைபெறுகிறது. அரசநிர்வாகங்கள் அனைத்திலும் அமைச்சர்களின் நேரடித்தலையீடுகள் உண்டு.
இதனால் அதிகாரிகள் சுயமாக நீதியாக தங்களது கடமைகளை செய்யமுடியாது உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மகிந்த ஆட்சியில் இருந்த அதே நிர்வாகமே தற்போதுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார் ஆனால் மட்டக்களப்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து நிர்வாகத்திலும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது. அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டுகின்ற நிலையே மட்டக்களப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர் ஒரு தனிநபரின் இடமாற்றம் சம்பந்தமாக அதிகாரி ஒருவரை மிரட்டும் தோனியில் “நீங்கள் அரசாங்கத்தின் தாபன விதிக்கோவைக்கு ஏற்ப நடக்கத்தேவையில்லை நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட பேசினார். ஆனால் அந்த அமைச்சருக்கு எதிராக யாரும் பேசவில்லை. காரணம் பயம். இவ்வாறு அரசாங்க அதிபர் உட்பட அனைவரும் அமைச்சர்களுக்கு பயந்து தங்களது நிர்வாகங்களை சரிவரசெய்யாது விடுகின்றனர்.
இதனால் பாமரமக்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்காக பேசவேண்டிய அமைச்சர்கள் இன்று சில தனிநபர்களுக்காக பேசுவதற்கு அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை பயன்படுத்துவது நல்லாட்சி அரசாங்கத்தின் சாதனையாக மாறியுள்ளது. “நாட்டின் ஜனாதிபதி செல்கிறார் நான் யாருக்காகவும் சிபாரிசு செய்வதற்காக அதிகாரிகளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்ததில்லை” என்று ஆனால் மட்டக்களப்பில் ஒரு பிரதேச செயலகத்தில் சுகயீன விடுமுறையில் இருக்கும் நபர் ஒரு அமைச்சரின் தனிப்பட்ட கட்டளைக்கு அமைய அரசாங்க அதிபரின் அனுமதியுடன் இன்றுமொரு அரசதிணைக்களத்தில் இடமாற்றம் பெற்றுச்சென்றதாக கையொப்பமிட்டுள்ளார். ஆனால் இவர் இடமாற்றம் பெற்றுச்சென்றது அந்த பிரதேச செயலாளருக்கு தெரியாது. இதுதான் மட்டக்களப்பின் நல்லாட்சியா? எம்மைப்பொறுத்தவரை இன்றும் மட்டக்களப்பில் மகிந்த ஆட்சியே நடைபெறுகின்றது அதே அமைச்சர்கள் அதே அரசாங்க அதிபர் என அனைத்து நிர்வாகங்களும் மகிந்தவின் வெற்றிக்காக பணியாற்றியவர்களே மீண்டும் மைத்திரியின் பின்னால் இருந்துகொண்டு மகிந்தவின் அதிகாரப்போக்கு கொண்ட சர்வாதிகார ஆட்சியை மட்டக்களப்பில் நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.
இன்று மட்டக்களப்பில் உள்ள பெரும்பான்மை தமிழ் சமூகம் இங்குள்ள சிறுபான்மையின அமைச்சர்களினால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கல்வி வேலைவாய்ப்பு அபிவிருத்தி பதவி என சகல மட்டங்களிலும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் தரப்பிரஜைகளாக நடாத்தப்படகின்றனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையாளராக பார்த்துக்கொண்டிருப்பதுடன் சில பாராளுமன்ற உறுப்பினர்களை சிறுபான்மை அமைச்சர்கள் ஊமையாக மாற்றியுள்ளனர். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் ஐயா கூட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சிறுபான்மையின அமைச்சர்களே அபிவிருத்தி தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்தளவுக்கு நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மையின அமைச்சர்களுக்கு அதிகாரங்களை வழங்கிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பற்களை பிடிங்கிவைத்துக்கொண்டு பெரும்பான்மையினமாக உள்ள தமிழ் மக்களை அதிகாரமற்ற மக்களாக மாற்றி அவர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் இந்த நல்லாட்சியில் அமைச்சராக்கப்பட்டு அவர் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் அபிவிருத்திக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதை வேடிக்கைபார்த்துக்கொண்டு “நாங்கள் என்ன செய்வது எங்களுக்கு அதிகாரமில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றார்கள். அப்படியானால் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைமைப் பதவியை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது? அதிகாரமில்லாத ஊமை பதவியை காட்டி தமிழ் மக்களை ஏன் அடிமைப்படுத்துகின்றீர்கள்? எம்மைப்பொறுத்தவரையில் மட்டக்களப்பில் நல்லாட்சி ஏற்படுத்தப்படவேண்டுமாக இருந்தால் மகிந்த ஆட்சியில் இருந்த நிர்வாகங்கள் முற்றாக மாற்றியமைக்கப்பட்டு அமைச்சர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சிவில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அமைச்சர்களின் தனிப்பட்ட கட்டளைகளுக்காக இயங்குகின்ற அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவேண்டும். தங்களது சொந்த தேவைகளுக்காக இனவாதகோசத்தை எழுப்பி அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். ஒட்டுமொத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினை இனவாதப் பிரச்சினையோ மதவாதப்பிரச்சினையோ அல்ல. மாறாக இது உரிமைப்பிரச்சியை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினத்திற்கான சகல உரிமைகளையும் பதவிகளையும் அதிகாரங்களையும் வழங்கி தமிழ் மக்களை எதுவுமற்றவர்களாக மாற்றி சிறுபான்மையின அமைச்சர்களினால் ஆழப்படுகின்ற இனமாக பெரும்பான்மையின தமிழ் மக்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் மாற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி, அபிவிருத்தி, பதவி, அதிகாரம் போன்ற சகல விடயங்களிலும் மிகவும் குறைந்த நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
சிறுபான்மையினத்தின் வளர்ச்சியில் சமஅளவில் கூட பெரும்பான்மையின தமிழர்கள் இல்லை. இவ்வாறான சூழலில் இது குறித்து பேசினால் அது இனவாதமாக கருதப்படுமென எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. இது இனவாதப்பிரச்சினை அல்ல இது உரிமைப் பிரச்சினை, வாழ்வாதாரப்பிரச்சினை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் உரிமைகளில் நிர்வாகத்தில் சிறுபான்மையின அமைச்சர்கள் மூக்கை நுழைப்பதை யாராளும் ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களது சிறுபான்மையின நிர்வாகங்களுக்குள் பெரும்பான்மை சமூகம் எவ்வாறு மூக்கை நுழைக்க கூடாது என கருதுகின்றீர்களோ, அதேபோன்று பெரும்பான்மை சமூகத்தின் நிர்வாகங்களுக்குள் மூக்கை நுழைக்க கூடாது. என்ற வேண்டுகோளையே இந்த நல்லாட்சி அரசிடம் விடுக்கின்றோம் ”என மட்டக்களப்பு தமிழ் மக்கள் தெரிவித்தனர்.