விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர் எனக் கூறப்படும் அந்தோணி எமில்காந்தன் என்பவர் இலங்கைக்கு வந்து நீதிமன்றத்தில் சரணடைவதற்கு மேலும் காலஅவகாசம் தேவை என அவரது சட்டத்தரணி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். எமில்காந்தன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள சிகப்பு அறிக்கையை இரத்துச் செய்யுமாறும் அவர் தனது சட்டத்தரணியின் ஊடாக இதற்கு முன்னர் கோரியிருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, சந்தேக நபரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக வெளியிடப்பட்டிருந்த சிகப்பு அறிக்கை இரத்துச் செய்தார்.
எமில்காந்தனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் கூறினார். இதனையும் இரத்துச் செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், சந்தேக நபர் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவேண்டும் என வழக்கில் ஆஜரான அரச சட்டத்தரணி குறிப்பிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனையை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி, அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணைகளை மார்ச் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.