நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்சவின் என்.ஆர்.அசோசியேட்ஸ் என்ற சட்ட நிறுவனம் இயங்கி வந்த கொழும்பு 5 கவர் வீதியில் இருக்கும் கட்டிடத்தை அதன் உரிமையாளர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளதால், நிறுவனத்தை நடத்தி செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்டிடத்தின் உரிமையாளர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால், அச்சமடைந்த அந்த நபர், கட்டிடத்தை உடனடியாக தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு நாமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தின் அலுவலகத்தை அருகில் உள்ள இடம் ஒன்றுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கட்டிடங்களின் உரிமையாளர்கள் எவரும் அதிகமான வாடகைக்கு கூட கட்டிடங்களை வழங்க மறுத்துள்ளனர்.
என்.ஆர்.அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பங்காளர்களாக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சா உட்பட பங்காளர்கள் கவர் வீதியில் இருந்து வெளியேறியுள்ளனர். அங்கு ஒரே ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி மாத்திரமே இருந்து வருவதாக கூறப்படுகிறது. அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுக்க முடியாத நிலையில், அலுவலகத்தில் இருந்த பொருட்கள், நாமல் மற்றும் ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் வசித்து வரும் டொரிங்டன் பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமையில், நிறுவனத்தை நடத்தி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நிறுவனம் மூடப்படும் சந்தர்ப்பம் இருப்பதாக என்.ஆர். அசோசியேட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.