மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக தனது பணியை முன்னெடுக்க முடியாத நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் ஆராம்பமான ‘மன்னாரின் சமர் மாபெரும் மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் ஆயர் இராயப்பு ஜோசேப்பு விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஆரம்பமானது. மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் மற்றும் ஜோசப்வாஸ் நகர் யுனைற்றட் விளையாட்டு கழகமும் இணைந்து குறித்த மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையிலே இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் குறித்த போட்டியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை வைபவ ரீதியாக மைதானத்தை திறந்து வைத்து
போட்டிகளை ஆராம்பித்து வைத்ததோடு வீரர்களையும் வாழ்த்தினார். அத்தோடு மைதானத்தில் ஆயரின் வருகைக்காக காத்திருந்த மக்களையும்,சிறுவர்களையும் ஆயர் ஆசி வழங்கினார். குறித்த மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.