நீண்டகால அகதி வாழ்விலிருந்து மீண்டு தற்போது சொந்த மண்ணில் சுயதொழில் செய்துவரும் சம்பூர் கொக்கட்டிச்சேனை மக்களை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன் வெளியேறுமாறு மூதூர் பிரதேச செயலகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமது காணிப் பிணக்கை தீர்க்குமாறு கோரி கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணியிடம் கொக்கட்டிச்சேனை மக்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.
இதன்போது கையளிக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், ´சம்பூர் கிராம அலுவலர் பிரிவில் நிரந்தரமாக வசிக்கும் நாங்கள், தொழில் நிமித்தம் சம்பூரிலிருந்து நவரெத்தினபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சேனை கிராமத்தில் கடந்த 30 வருடகாலமாக ஜீவனோபாய தொழில் மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் கடந்த 10 வருட காலமாக முகாம் வாழ்க்கையை அனுபவித்த நாங்கள், எங்களது குடும்பத்தின் வாழ்வாராத ஜீவனோபாய தொழில் செய்துவரும் காணியை விட்டு வெளியேறுமாறு மூதூர் பிரதேச செயலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
´காணியை விட்டு வெளியேற்றல்´ என தலைப்பிட்டு சட்டவிரோதமாக அத்துமீறி குடியிருப்பதால் 2016.02.29 ஆம் திகதிக்கு முன் காணிகளை விட்டு வெளியேறுமாறும் இல்லையேல், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மூதூர் பிரதேச செயலாளரினால் 2016.02.16 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் 18.02.2016 திகதி தபால் மூலம் எமக்குக் கிடைக்கப்பெற்றது. ஆனால் பல்லாண்டு வாழ்வியல் அடையாளங்களான பனைமரங்கள், கிணறுகள், வழிபாட்டு இடங்கள், என்பவற்றைக் கொண்ட இங்குள்ள காணிகளில் பெரும்பாலானவை தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு இன்றுவரை வந்துள்ளதுடன்,
இங்கு வாழும் குறிப்பிட்ட மக்களிடம் அனுமதிப்பத்திரங்கள், அளிப்புக்கள் இருப்பதுடன், பலரது அனுமதிப்பத்திரங்கள் வன்செயலின்போது இடம்பெயர்வின் காரணமாக அழிக்கப்பட்ட நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களும் உண்டு. கடந்த 1985, 1990 காலங்களில் உக்கிரமடைந்திருந்த யுத்த சூழலில் இங்கு வாழ்ந்த மக்களாகிய நாம் சம்பூருக்கும் கொக்கட்டிக்கும் ஆக மாறி மாறி வாழ வேண்டியவர்களாய் இருந்தது. கடந்த 2006 இடப்பெயர்வுடன் முழுமையாக இடம்பெயர்ந்தோம். ஆனால் 2013 இல் எமது அயல் கிராமமான நவரெத்தினபுரம் மீள்குடியேற்றப்பட்டது.
குறித்த கிராம அலுவலர் பிரிவில் எனது வாழ்வாதாரக் காணி அமையப்பெற்று இருப்பதால், நாம் இடம்பெயர்ந்து முகாமில் இருந்த நிலையில், 2006ஆம் ஆண்டிற்கு முன்னர் ஜீவனோபாய தொழிலினை இன்றுவரை மேற்கொண்டு வந்தோம். கால்நடைகள், சேனைப்பயிர்கள், மரக்கறித் தோட்டங்கள் மற்றும் நெல்வயல்கள் என கொக்கட்டிக் கிராமம் மீள வளமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாகாண ஒதுக்கீட்டு நிதியில் சம்பூரில் இருந்து கொக்கட்டிக்கான பாதை புனரமைக்கப்பட்டும் விவசாயத் திணைக்கள நிதியில் கொக்கட்டிக்குளம் புனரமைக்கப்பட்டும் உள்ளது.
2013 இல் நவரெத்தினபுரம் கிராமம் மீளக்குடியேற்றப்பட்ட நாள் முதல் அங்கு குடிசைகள் அமைத்து சேனைகள் செய்து கால்நடைகளுக்கான பட்டிகள் அமைத்து பழைய ஆலயத்தை மீள துப்பரவு செய்தபோது எவராலும் எந்த தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. பாமர மக்களின் மனங்களைப்புரிந்து கொண்டு நல்லாட்சி நடத்தும் இவ் ஆட்சிக் காலத்தில் எமது நிர்க்கதியான இன்னிலையை கருத்திற்கொண்டு எமது பாரம்பரியமானதும் பூர்வீகமானதும் வளமானதுமான கொக்கட்டிச்சேனை வாழ்வாதாரக் காணியை மீட்டுத்தருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துத் தருமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்´ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.