(Kalaiyarasan Tha)
பிரிட்டிஷ் லேபர் கட்சித் தலைவருக்கான தேர்தலில், ஜெரேமி கொர்பைன் அறுபது சதவீத வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பெரும்பாலும் இளையதலைமுறை லேபர் கட்சி உறுப்பினர்கள் அவரை ஆதரிக்கின்றனர். ஜெரேமி கொர்பைனின் வெற்றி பற்றிய தகவலை, வலதுசாரி தமிழ் ஊடகங்களும், வலதுசாரி தமிழ் இணைய ஆர்வலர்களும் இருட்டடிப்பு செய்தால், அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. லேபர் கட்சித் தேர்தலில், ஜெரேமி கொர்பைன் போட்டியிடும் பொழுதே, முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். என்ன காரணம்? ஜெரேமி கொர்பைன் ஒரு சோஷலிஸ்ட்! இடதுசாரி பொருளாதாரக் கொள்கையை அமுல் படுத்தப் போவதாக வெளிப்படையாக பேசி வருபவர்! ஜெரேமி கொர்பைன் உண்மையான சோஷலிஸ்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது அரசியல்-பொருளாதார கொள்கைகள், பிரிட்டனைப் பொறுத்தவரையில் “தீவிர இடதுசாரித் தன்மை” கொண்டவை. ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, “முதலாளித்துவத்தின் தாயகமான” பிரிட்டனில் இடதுசாரி அலை வீசுவது குறிப்பிடத் தக்க விடயம். நமது தமிழ் வலதுசாரி ஊடகங்கள் இந்தத் தகவலை சுய தணிக்கை செய்து கொண்டதற்கும் அது தான் காரணம்.