இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984- 1989ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் சமஸ்டி தீர்வு ஒன்றை இலங்கையிடம் கோருவதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் 13வது திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துதில் அவர் அக்கறை காட்டவில்லை என்றும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கையில் சமஸ்டி தீர்வை கோராது எனினும் தமிழர்கள் விரும்பும் யோசனைகளை அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டதாக பெருமாள் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி சமஸ்டியை வலியுறுத்தாமைக்கு அப்போது பஞ்சாப்பில் சுயாட்சி போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையே காரணம் என்று வரதராஜப்பெருமாள் சுட்டிக்காட்டியுள்ளார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா வலியுறுத்தல்களை கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக மாகாணசபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. அத்துடன் 2006ஆம் ஆண்டில் வடக்குகிழக்கை எதிர்ப்பின்றி பிரிப்பதற்கும் வழிவகுக்கப்பட்டது என்று பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
1989ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை தோற்கடிப்பதற்காகவே திமுகவினரும் பிரதமராக வரவிருந்த வி பி சிங்கும், இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிர்ப்பை காட்டினர். இந்;தநிலையில் ராஜீவ் காந்தி கொல்லபப்பட்டதும் இலங்கை தமிழர் பிரச்சினையை இந்தியா உதட்டளவில் மாத்திரம் கையாண்டது. இந்தியாவை பொறுத்தவரை தற்போது இலங்கையுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறது. இதற்காக மனித உரிமைமீறல் விடயம் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இரண்டாவது தமிழர்களும் சிங்களவர்களும் பேசி தீர்வு ஒன்றுக்கு வரவேண்டு;ம் என்று இந்தியா விரும்புகிறது. தமிழர்களை பொறுத்தவரையில் அவர்கள் எதிர்ப்பார்க்கும் சமஸ்டி தீர்வை ஒரேயடியாக பெறமுடியாது. தொடர்ச்சியான பல சிறிய தடைகளை வெற்றிக்கொள்வதன் மூலமே அதனை பெறமுடியும் என்று வரலாற்றில் அதற்ககான சான்றுகள் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.