பிரச்சினையை பெரிதுபடுத்தி சிலர் குளிர்காய முனைகின்றனர் – முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

 

கட்சிக்குள் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சாதாரண விடயமென்றும், அதனை ஒருசில சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் பெரிதுபடுத்தி அதில் குளிர்காய முனைவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின்போது முதலமைச்சர் நடந்துகொண்ட விதம், குறிப்பாக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து கட்சிக்குள் கடந்த நாட்களாக பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து முதலமைச்சர் தெரிவித்தபோதே, இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், பிரச்சினைகளை பெரிதுபடுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எமது நோக்கம் நன்றாக அமைய வேண்டும். அது மாத்திரமன்றி எவரும் தனது கருத்தைக் கூற பரிபூரணமான உரிமையுடையவர்களாவார். அந்தவகையில் நாம் வெறுமனே உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியமில்லை. என்னைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கு நான் மிகவும் விசுவாசமாகவும் இதயசுத்தியுடனும் தொடர்ந்து செயற்படுவோம்.

நாம் அனைவரும் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணிக்காக புறப்பட்டவர்கள். அந்த வகையில் அனைவருமே எமது பணிகளை மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டு வருகின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும், காசி ஆனந்தனும் நான் மட்டக்களப்பு நீதிபதியாக இருந்தபோது 1979ல் என்னால் விடுவிக்கப்பட்டார்கள். அன்று தொடக்கம் எனக்கு மாவையைத் தெரியும். தமிழ் மக்களின் ஈடேற்றத்துக்காக சளைக்காது குரல் கொடுத்து வரும் ஒருவர் அவர். எமக்கிடையே எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.

சிலவேளைகளில் சில வார்த்தைகள் தவறான கருத்தைக் கொடுக்கலாம். சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் தவறில்லை என்பது புலனாகும். அதுபோன்றுதான் இதுவும்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். ஆளுமை மிக்க தலைவர் அவர். அந்தவகையில் அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயற்படுவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கு இல்லை.

காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். விரைவில் நாம் ஒன்றுகூடி பேசி தமிழ் மக்களின் நெருக்கடிகளைப் போக்க அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது தொடர்பில் தீர்மானிப்போம். மக்கள் எம்மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் செயற்பட வேண்டியது எமது தலையாய கடமை.

தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும். அதற்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாம் சாதகமாக கையாள்வது அவசியம்.

யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை விவகாரம் முனைப்புப் பெற்றுள்ளது. அது தொடர்பில் நாம் துரிதமாகவும் வினைத்திறனுடனும் செயற்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு கடமைகள் எம்முன்னே விரிந்து கிடக்கும் நிலையில் நாம் சிறுசிறு விடயங்களில் முரண்படுவது வேண்டாத காரியம்.

மக்கள் எம்மீது கொண்ட அதீத நம்பிக்கையே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எம்மை ஆதரித்து முன்னிலைப்படுத்தி வந்துள்ளது. எனவே தமிழர் பிரச்சினை சாண் ஏற முழம் சறுக்கும் நிலைக்கு செல்லாதிருப்பதை உறுதி செய்வது எமது தார்மீக கடமை’ என்றார்.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.