எமது ஊரில் 1921 இல் றோ.க.பாடசாலை சுவாமி ஞானப்பிரகாசர் என்பவரால் உருவாக்கப்பட்டது.ஆனாலும் மதம் மாற விரும்பாத காரணங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .நீண்ட காலங்களுக்கு பின் நடராசா,சின்னத்தம்பி,சிங்கபாகு ஆகிய மூவரும் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வி படிக்க புறப்பட்டனர்.நடராசா 9 வது வகுப்புடன் நிறுத்திவிட்டார்.பின்னர் சில காலத்தின்பின் சங்கத்தானையில் படித்தார்.
இவர்களைத் தொடர்ந்து என் அண்ணன்மாரகள் மட்டுவில் பின் புதிய பாடசாலையான வரணி மகாவித்தியாலயத்தில் படித்து சித்தியடைந்தனர்.என் பெரிய அண்ணன் உயர்தரம் தொடர விரும்பவில்லை .பொருளாதார காரணங்களால் அய்யாவும் வலியுறுத்தவில்லை.எமது ஊரில் எனது அய்யாவும் சின்னத்துரை என்பவரும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை உறுப்பினர்கள்.
1960 தேர்தலில் எமது ஊரில் இரத்தினம்,நடராசா ,சின்னத்துரை ,அப்பையா என்பவர்கள் தமிழரசு ஆதரவாளர்கள் .இதில் நடராசாவும் சின்னத்துரையும் த்ம்மை முன்னிலைப் படுத்துவதில் அக்கறை கொண்டனர்.
நமது ஊரில் நிறைய அரச காணிகள் இருந்தன.இதை சுருட்ட நினைத்தவர்கள் சின்னத்துரை துணையுடன் பல காணிகளை தமதாக்கிக் கொண்டனர்.இதில் ஒரு சில துண்டுகள் சின்னத்துரைக்கும் அவரது சகோதர்ருக்கும் கிடைத்தது.
மறுபுறத்தில் அன்றைய அக்கராயன் குடியேற்றத்தில் நடராசாவின் தந்தை கணபதிக்கும் எனது உறவினரான வேலர் என்பவரகளுக்கும் காணிகள் கிடைத்தன.அதனைத் தொடர்ந்து வ்வுனிக்குளம் குடியேற்றத்தில் நடராசாவின் நெருங்கிய உறவினர்களுக்கு காணி கிடைத்தது.இதில் விதி விலக்காக இரத்தினத்தின் சிறிய தகப்பனுக்கும் கிடைத்தது.
சின்னத்துரையும் நடராசாவும் ஒவ்வொரு பக்கமாக தலைமை வகித்தனர்.எமது ஊரில் நடராசா ஒரு வாசிகசாலையை உருவாக்கினார்.
இக் காலத்தில் எமது ஊரில் சன்னியர் செல்லையா என்ற கிராம சபை உறுப்பினர் இருந்தார் .அந்த காலங்களில் எமது கிராமசபை எமது ஊரில் நில உடமையாளரான நல்ல மாப்பாண உடையாரின் கட்டுப்பாட்டில் இருந்தது.இவர் காங்கிரஸ் ஆதரவாளர்.அப்போது எமது பகுதிகளில் அவரை யாரும் எதிரப்பதில்லை.அவர் ஒருவர் பெயரை தெரிவு செய்து கிராம சபை உறுப்பினருக்கும் விடுவார்.அவரகள் கூட்டம் நடக்கும்போது போய் வெளியே நின்று விட்டு வருவார்கள் .ஆனாலும் அந்த கிராம சபை எமது ஊரில் பல இடங்களில் குடிநீர் கிணறுகளைக் கட்டிக் கொடுத்தது.
இப்படியே சன்னியர் செல்லையாவும் தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர் வெளியே நின்றுவர தயாராக இல்லை.உள்ளே அழைத்தார்கள்.கதிரை கொடுக்கவில்லை .அவர் வாதாடி கதிரையில் அமர்ந்தார்.
இவர் கிணற்றைக் கண்டு திருப்தி கொள்ளவில்லை.கிராம சபை மூலமாக காணி வாங்கி பனை வெல்ல தொழிற்சாலை ஒன்றை அந்த நாட்களில் உருவாக்கினார்.இது நடந்தது 60களில்.இதனால் இவருக்கு செல்வாக்கு தானாக வளர்ந்தது.இது நடராசா,சின்னத்துரை தமிழரசுக்கட்சி ஆகியவற்றுக்கும் பொறுக்க முடியவில்லை.
சின்னத்துரை நடராசா ஆகியோர் இணைந்தனர்
(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)