இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தீர்மானித்துள்ள தமிழக அரசாங்கம், இது தொடர்பில் மத்திய அரசாங்கத்துக் கடிதமொன்றை எழுதியுள்ளது. தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், 2ஆம் திகதி புதன்கிழமை எழுதிய கடிதத்தையடுத்து, இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது.
‘அரசியலாக்க விரும்பவில்லை’
‘தேர்தலுக்கான அறிவிப்பு வரும் நேரத்தில், 7 பேரின் விடுதலை விவகாரத்தை கையில் எடுத்தது ஏன் என புரியவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை’ என்றார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘மூன்று மாதங்களாக அமைதியாக இருந்த தமிழக அரசு, தற்போது பிரச்சனை எழுப்புவது ஏன், என்றும் வினவிய அவர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் தகுந்த நேரத்தில் மத்திய அரசு உரிய முடிவை எடுக்கும்’ என்றார்.
‘சொந்தக் கருத்தை சொல்லேன்’
‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தியின் கருத்து என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது, ‘7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இவ்விவகாரத்தில் எனது சொந்தக் கருத்தை கூற விரும்பவில்லை’ என்றார்.
‘அரசாங்கம் ஆலோசிக்கும்’
‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பில், தமிழக அரசாங்கத்தின் கடிதம் குறித்து மத்திய அரசாங்கம் ஆலோசிக்கும் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் மக்களவையில், நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 435ஆம் பிரிவின்படி, தமிழக அரசின் முடிவு தொடர்பான விஷயத்தில் மத்திய அரசாங்கத்தின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசாங்கத்துக்கு எழுகிறது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், ‘ஆலோசனை என்ற வார்த்தை, தெரியப்படுத்துதல் என்பதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் அனுமதியைப் பெறுதல் என்ற அர்த்தத்தில் உள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதை மறுசீராய்வு செய்வதற்காக, உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான மாநில அரசாங்கத்தின் உரிமையை விட்டுத்தரவில்லை என்பதை இதன் மூலம் கூறிக்கொள்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது’ என்றார்.
‘161 ஆவது பிரிவே சிறந்தது’
‘7 தமிழர்களின் விடுதலை விவகாரம் அவர்களின் விடுதலையைத் தட்டிக்கழிக்கும் நோக்கம் கொண்ட முழுக்க முழுக்க அரசியல் இலாபம் தேடும் செயலாகும் என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முதலமைச்சர் ஜெயலலிதா, உண்மைகளைத் தெரிந்து கொண்டே, 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளார். அவ்வாறு அனுமதி கேட்பதன் நோக்கம், தமிழக அரசியல் களத்தில் தமக்கு எதிராக உள்ள அனைத்து தேசியக் கட்சிகளையும் அம்பலப்படுத்துவது தானே தவிர, 7 தமிழர்களையும் விடுதலை செய்வது அல்ல என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுனருக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு பரிந்துரைத்தால், 7 தமிழர்களும் ஒரே நாளுக்குள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மத்திய அரசே ஒப்புதல் தருக’
7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் முடிவு செய்துவிட்டது இதற்கு அரசாங்கம் ஒப்புதல் தர வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளதை உலகத் தமிழினம் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்று தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன், அதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள இந்த மாந்தநேயமிக்க நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
எண்ணற்ற புரட்சிகரமாக திட்டங்களை நிறைவேற்றி தமிழரது வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கும் தமிழக முதல்வர் 7 தமிழர் விடுதலையையும் வென்றெடுப்பார் என்று உலகத் தமிழினம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.