தாம் வழங்கிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருந்தினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக ஆட்சி வகித்த காலத்தில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்ததாகவும் அதனை பிரபாகரன் நிராகத்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் பின்னர் வருந்தியுள்ளார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். லண்டனில் பணியாற்றிய அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று வரும் நபர் ஒருவரிடம் ‘பிரபாகரன், இவ்வாறு அரசியல் தீர்வுத் திட்த்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என வருந்தியுள்ளார் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
சிங்களத் தலைவர் ஒருவரினால் வழங்கப்படக்கூடிய அதிகபட்சமான விடயங்களை தாம் வழங்கியதாகவும், மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இனவாதத் தூண்டுதல்கள் அதிகரித்துள்ளதனால் தற்போதைய தலைமைகளுக்கு தமிழர்களுக்கு தாம் வழங்கிய அளவிற்கு வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில்; அமெரிக்கா மேற்கொண்டளவிற்கு இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அமெரிக்கா மற்றும் ஈராக்கைக் காரணம் காட்டி இலங்கையில் இடம்பெற்றவற்றுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமை முன்னெடுக்கப் படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகார மோகம் கிடையாது எனவும் இந்த அரசாங்கத்தில் பதவி வகிக்க விரும்பவில்லை எனவும் மக்களுக்கு நன்மை செய்வதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.