சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த இந்தியாவை வீழ்த்தி சீனா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில், சீனாவில் இருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகளின் மூலம் அறியமுடிந்துள்ளது. பெப்ரவரி மாதத்தில், 32,186 சீனர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.4 வீத அதிகரிப்பாகும். அதேவேளை பெப்ரவரியில், 26,559 இந்தியர்கள் சிறிலங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 33 வீத அதிகரிப்பாகும். கடந்த ஜனவரியில் 28,895 இந்தியர்களும், 26,083 சீனர்களும் சிறிலங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் அடிப்படையில், சீனர்களே அதிகளவில் சிறிலங்கா வந்துள்ளனர்.
57,269 சீனர்கள் இந்த ஆண்டில் சிறிலங்கா வந்துள்ளனர். இது 49 வீத அதிகரிப்பாகும். அதேவேளை, 55,454 இந்தியர்களும் இந்த ஆண்டில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 29 வீத அதிகரிப்பாகும். நீண்டகாலமாகவே சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை வகித்து வந்தது. தற்போது அந்த இடத்தை சீனாவிடம் இந்தியா இழந்திருக்கிறது. இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலும், 321,787 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22வீத அதிகரிப்பாகும். 2015ஆம் ஆண்டு 1.79 மில்லியன் சுற்றுலாப் பயயணிகளை ஈர்த்து, 2.86 பில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றிருந்தது சிறிலங்கா. இந்த ஆண்டு 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.