இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் டீக்சித் யுகம் மீண்டும் திரும்புகின்றதா என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஓத்துழைப்பை கூட்டு எதிர்கட்சியினர் எதிர்த்துவருவதை கடுமையாக விமர்சித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் வை கே சின்கா கருத்து வெளியிட்டுள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டு தூதுவர் ஓருவர் எதிர்கட்சியினரின் பணிகுறித்து இதுவரை கேள்வியெழுப்பியதில்லை, அவ்வாறு கேள்வி எழுப்பபடுவது இதுவே முதற்தடவை. இலங்கைக்கான இந்திய தூதுவராக பணியாற்றிய ஜேஎன் டீக்சித்த செயற்பட்ட விதம் குறித்து தற்போதைய சூழலில் மீண்டும் ஓரு முறை ஆராய்வது பயனுள்ளதாக அமையலாம்.
நாங்கள் டீக்சித் காலத்தின் மேலாளுமை காலத்திற்கு மீண்டும் திரும்பிவிட்டோமா? புதுடில்லியிலுள்ள இலங்கை தூதுவர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி குறித்து தரக்குறைவான வகையில் கருத்து தெரிவித்திருந்தால் என்ன நடந்திருக்கும். கூட்டு எதிர்கட்சியினர் மக்களின் விருப்பங்களை நேர்மையான முறையில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இதன் காரணமாக கூட்டு எதிர்கட்சியினர் எட்கா ஓப்பந்தத்தை எதிர்க்கின்றனர். எங்களது கருத்துக்களின் அடிப்படையிலேயே அவற்றிற்கு பதில் வழங்கப்படவேண்டும். மாறாக தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. இந்திய தூதுவரின் பேச்சு இராஜதந்திர நெறிமுறைகளை மீறிய செயலாகும். எட்கா மற்றும் இந்திய அம்புலன்ஸ் சேவைகளிற்கு எதிரான பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.