“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்” என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ‘தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்’ என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது.
இதனால் மிகவும் சோர்ந்துபோனது திமுக. பாஜக என்ன செய்வது என்று கைகளை பிசைகிறது. ஆனால் மக்கள் நலக்கூட்டணி மட்டும் சுறுசுறுப்பாகியுள்ளது.சென்னை, தியாகராயர் நகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ரகசியமாக சந்தித்து, விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணியை இணைக்கலாமா என்று தீவிர ஆலோசனை செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், அவ்வாறு தேமுதிகவுடன் சேரும் பட்சத்தில், விஜயகாந்திடம் முதல்வர் வேட்பாளர்,தொகுதிப் பங்கீடு,தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அறிவிப்புகள் உள்ளிட்டவை பற்றி எந்தமாதிரி பேசலாம் என்றும், வேறு கட்சிகள் இதே போன்ற மனவோட்டத்தில் இருந்தால் அவற்றையும் ஒருங்கிணைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம், புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், இன்னும் சில முக்கிய அமைப்புகளும் விஜயகாந்த் தலைமையை ஏற்க தயராகி வருவதாக தெரிகிறது.
இந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்து செயல்பட்டால், தேமுதிகவோடு சேர்ந்து மொத்தம் 15 கட்சிகள் ஒரு அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தரப்பில் கேட்டபோது, “விஜயகாந்த் தலைமையில் நாங்கள் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஆனால் அவ்வாறு சேரும் பட்சத்தில், அதில் கண்டிப்பாக பாஜக இருக்காது” என்று கூறினர்.
மக்கள் நலக்கூட்டணியின் இந்த திடீர் திட்டம் செயலுக்கு வருமானால் திமுக- காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகள் என்று தமிழகத்தில் 5 முனைப் போட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் தங்களின் வெற்றிக்கான யுக்தியை வகுப்பதில் திமுகவும், அதிமுகவும் இறுதிக்கட்ட முனைப்பில் உள்ளன. இதனால் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதில் அதிமுக முந்திக்கொண்டு, முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்றும், அதன்பிறகே அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும் இந்தத் தேர்தல் அறிக்கையில், இலவச அறிவிப்புகள் பெரும்பாலும் இடம்பெறாது என்றும், மாநில வளர்சிக்காகன தொலைநோக்குத் திட்டங்களின் வாக்குறுதிகள் அதிகம் இடம்பெறும் என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. வரும் வாரத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இதே போல திமுகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில் அதிமுக, திமுக கட்சிகளை எதிர்த்து விஜயகாந்த் தலைமையில், பல கட்சிக் கூட்டணி அணி திரண்டால், அது நிச்சயம் அவ்விரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால் இரண்டு தரப்பிலும் இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த நடவடிக்கைகளின் தொடக்கம்தான் தேமுதிகவை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவிலும், அதிமுகவிலும் ஐக்கியமாவது.
அதே நேரத்தில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக்கூட்டணியும், இதர உதிரி கட்சிகளும் ஒன்றிணைந்து பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்தால், நிச்சயம் அது திமுகவையும், ஆளும் கட்சியான அதிமுகவையும் ஆட்டம் காண வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனலாம்.
ஏனெனில் அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் அவற்றை வீழ்த்தவேண்டும் என்று விஜயகாந்த் தொடர்ந்து கூறிவருவதும், அவ்விரு கட்சிகளுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடிய ஒரு வலுவான சக்தியாக அவர் உருவெடுத்திருப்பதும், ஒரு தேர்தலில் அதிமுக, அடுத்த தேர்தலில் திமுக என மாறி மாறி ஆட்சியில் அமர்த்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ள குரல்களும் ஒன்று சேர்ந்து வாக்காளர்கள் மனதில் ரசவாதம் நிகழ்த்தினால், தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுவதற்கான சாத்தியம் நிகழலாம்.
– தேவராஜன்.