பாகிஸ்தான்: பாராளுமன்றம் கலைப்பு: 90 நாட்களில் தேர்தல்

அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.  பாகிஸ்தான் பாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரகடனத்தைப் பாகிஸ்தான் ஜனாதிபதி  பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையின்படி இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.