தெஹிவளை ரயில் நிலையத்தில், தெற்குப் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலை இலக்குவைத்து, 1996ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு உதவினார்கள் எனவும் உடந்தையாயிருந்தார்கள் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஐராங்கனி பெரேரா, இந்தத் தீர்ப்பை நேற்று வழங்கினார்.
சின்னப்பு செல்வராசா, செல்வராஜ் ஸ்ரீதரன் ஆகிய இருவருமே, இவ்வாறு குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்பதோடு, இருவரது சிறைத்தண்டனை முடிவில், வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையத்துக்கு ஓராண்டு புனர்வாழ்வுக்கு அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த இருவரும், ஏறத்தாழ 20 ஆண்டுகள் தடுப்புக் காவலில் இருந்தார்கள் என்பதையும் இத்தாக்குதலின் பிரதான சந்தேகநபர், ஏற்கெனவே குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார் என்பதையும் கருத்திலெடுத்தே, இவர்களுக்கான தண்டனையை நீதிபதி வழங்கினார்.
இந்தச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்களான றொபேர்ட் மக்ஸிலன், சவரிமுத்து லோகநாதன், ரமணி என அறியப்படும் திருமகள் ஆகியோர், தெஹிவளை ரயில் நிலையத்தில் ரயிலில் குண்டுவைக்க முயன்ற சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக 2013ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இருவருக்கு 10 ஆண்டுகளும் ஒருவருக்கு ஐந்தாண்டும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
தெஹிவளை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதோடு 400 பேர் காயமடைந்திருந்தர். ரயிலின் நான்கு பெட்டிகளில் குண்டுகள் அடங்கிய பெட்டிகளை வைத்து வெடிக்க வைத்தே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.