சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகளை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். சிரிய முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான ஐ.நா சபையினால் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த திங்கட்கிழமையன்று, இரவு நேரத்திலேயே இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டது.
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், ரஷ்யப் படைகளின் பிரசன்னமும் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கான ரஷ்யாவின் ஆதரவும், மிகப்பெரிய முட்டுக்கட்டைகளாகக் கருதப்பட்டன. ஆகவே, ரஷ்யாவில் இந்த வெளியேற்றம், முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதற்கான பணிப்புரையை, தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட உரையொன்றில், ஜனாதிபதி புட்டின் விடுத்தார். ‘எங்களுடைய பாதுகாப்பு அமைச்சுக்கும் இராணுவப் படைகளுக்கும் முன்னால் முன்வைக்கப்பட்ட பொறுப்பு, முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நாளைய தினத்திலிருந்து (இன்று) சிரிய அரபுக் குடியரசிலிருந்து எங்களுடைய இராணுவபட பிரிவுகளின் பிரதான பகுதியை வாபஸ் பெற ஆரம்பிக்குமாறு நான் பாதுகாப்பு அமைச்சைப் பணிக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குவது குறித்த முடிவு, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு தொலைபேசி மூலம் அறிவிப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு செப்டெம்பரில், சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக விமானத் தாக்குதல்களை ஆரம்பித்த ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள், சிரிய அரசாங்கத்துக்கு மிக முக்கியமான ஆதரவாக இருந்து வந்தன. தற்போது ரஷ்யாவின் பின்வாங்கல், பேச்சுவார்த்தைகளில் சிரிய அரசாங்கத்துக்கு அதிக அழுத்தத்தை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
படைகளைப் பின்வாங்குவதாக ரஷ்யா அறிவித்துள்ள போதிலும், சிரியாவிலுள்ள ஹமெய்மிம் விமானத்தளமும் தார்ட்டஸ் கடற்படை வசதியும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்குமெனவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரஷ்யத் துருப்புகள், தொடர்ந்தும் சிரியாவில் தங்கியிருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு பேர் தங்கியிருப்பார்கள் என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.