அண்ணன் பற்குணம் நாங்கள் அறிந்தவரையில் மிகவும் துணிச்சலான மனிதர்.ஆனால் அவர் சிறு பராயம் அப்படி அல்ல.குழந்தையில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு தப்பியவர்.15 வயது வரையில் மிகவும் பயந்த ஒருவராகவே வாழ்ந்தவர். அம்மா காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருந்த காலத்தில் இவர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் பெரிய அண்ணனைத் தொடர்ந்து படிக்க சேர்ந்தார்.இவர் சேர்ந்த காலத்தில் நடராசாவும் மற்றும் இருவரும் படிப்பை முடித்துவிட்டனர்.எனவே பெரிய அண்ணன் துணையோடு பள்ளிக்குப் போய் வந்தார்.இவர் சேர்ந்த பின் ஒரு உண்மை அய்யாவுக்கு தெரியவந்தது.பெரிய அண்ணன் பாடசாலைக்கு ஒழுங்காக போவதில்லை .கண்டித்துப் பார்த்தார்.அப்பவும் ஏமாற்றமே.எனவே அவரை வரணி மகாவித்தியாலயத்துக்கு மாற்றிவிட்டார்.
எனவே பற்குணம் தனியாகவே மிகவும் பயத்துடன் போய்வந்தார்.நான் படிக்கும் காலங்களிலேயே அந்தப் பாதை பயம் நிறைந்தது.கூடவே பள்ளிக் கூடத்தில் விசித்திர அனுபவம் ஒன்றையும் சந்தித்தார்.
அங்கே ஒரு முட்டாள் ஆசிரியர் இருந்தார்.அவர் ஒருநாள் இடைவேளையின் போது இவரை அழைத்து, போய் பிரின்ஸ்சிப்பலிடம் நெருப்புப் பெட்டி வாங்கி வா என இவரை அனுப்பினார்.இவர் போய்ப் பார்க்க அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அதை பார்த்த இவர் அந்த முட்டாள் ஆசிரியரிடம் விபரத்தை சொன்னார்.அவரோ உன்னை நெருப்புப் பெட்டி வாங்கிவர சொல்ல நீ ஏன் அவர் சாப்பிடுறதை சொல்லுகிறாய் என இவரை அடித்து விரட்டினார்.
இவர் மீண்டும் பிரின்ஸ்சிப்பலிடம் சென்று நெருப்புப் பெட்டி கேட்க நான் சாப்பிடுவது தெரியவில்லையா எனக் கேட்டு பிரம்பால் அடி போட்டார்.அவரும் அழுது கொண்டே வந்து விசயத்தை சொல்ல அந்த ஆசிரியர் கோப்ப்பட்டு இவரையும் இழுத்துக்கொண்டு போய் அவரை ஏன் இவனை அடித்தாய் என கேட்டு அவரை தாக்க முயல வேறு சில ஆசிரியர்கள் வந்து தடுத்துவிட்டனர்.
அத்தோடு இவருக்கு மேலும் பயம் பிடித்துக்கொண்டது.விடா பிடியாக அங்கே படிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.அடுத்த ஆண்டில் அய்யா பற்குணத்தையும் வரணி மகாவித்தியாலயத்தில் சேர்த்தார்.
இங்கேதான் கணேசபிள்ளை என்னும் வேறு சமூகத்தைச் சேர்ந்த நண்பர் அறிமுகமானார்.இந்தப் பாடசாலையில் அதிபராக இருந்தவர் இராசதுரை .இவர் ஹட்லிக் கல்லூரியில் திரு.பூரணம்பிள்ளை அவரகளின் பின் அதிபராக இருந்தவர்.அண்ணனின் கல்வியில் மிகவும் அக்கறை செலுத்தியவர்.