நம்மில் பலரும் அவரை இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர்களான தர்மகுலசிங்கம், புவிராஜசிங்கம், ராஜகுலசிங்கம் (பாபு கேட்டரிங் உரிமையாளர்), விஜயகுலசிங்கம், டொக்டர் பஞ்சகுலசிங்கம் ஆகியோரினதும், மற்றும் இந்திராணி ( கல்யாணி ), செல்வஜோதி, புஷ்பஜோதி , பிரோமஜோதி ஆகியோரின் தந்தையாராகத்தான் அறிவோம். கந்தையா அவர்கள் ஒரு பெரும் சமூக சேவகர் என்பதும், சமூக மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் என்பதையும், முன்னாளில் நல்லதொரு கம்யூனிஸ்ட் ஆக செயல்பட்டார் என்பதையும் நம்மில் பலரும் மறந்துவிடக் கூடாது. இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசு மாஸ்டரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர் தோழர் கந்தையா. தோழர் கந்தையாவின் சொந்த வாழ்க்கையே புரட்சிகரமானது. ‘வலது கை கொடுப்பது இடது கை அறியாது’ என்பதுபோல் அவர் செய்த சமூக உதவிகளையும், பல்வேறு சேவைகளையும் அறிந்தால் பிரமிப்படைந்துவிடுவோம். ‘நீ சமூகத்தை மாற்றுவது என்பது உன்னில் இருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்பதை நம்பியவர் அவர். ஒரு குழந்தையுடன் விதவையாக இருந்த கனகம்மாவை மறுமணம் புரிந்த புரட்சிவாதி. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் இத்தகைய விவாகம் மாபெரும் சமூகப்பிரமிப்பாக இருந்தது. நல்லதொரு கணவனாக, மொத்தம் ஒன்பது குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் தோழர் கந்தையா. அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவரது பிரிவால் துயருறும் அவர்தம் பிள்ளைகளுடன் நாமும் துயரத்தில் பங்கு கொள்கிறோம்.
(Narayana Moorthy)