12 பேரை மட்டுமே ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட படகு அது , அளவுக்கு அதிகமான பாரங்களுடன் 81 பேர் பயணம் செய்தாக வேண்டும். படகில் ஆட்களை ஏற்றும் பொறுப்பில் இருந்தவர் தலைவரிடம் வந்து அனுமதிகேட்டார் “இன்னுமொரு நண்பர் நம்மோடு பயணம் செய்ய விரும்புகிறார்”. தலைவர் அந்த புதிய நபரை பார்த்தார் ஏற்கனவே அவருக்கு அறிமுகமான மனிதர்தான். மெலிந்த தோற்றம், சற்று குட்டையான உருவம், ஆள் கணக்கிற்கு வரட்டும் என்று நினைத்திருப்பார் போல, அந்த தலைவர் ஒப்புக்கொண்டார்.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் நள்ளிரவு 1 மணிக்கு 82 பேருடன் கொட்டும் மழையில் தனது பயணத்தை தொடங்கியது “கிரான்மா”. ஒரு தேசத்தின் வரலாற்றை மாற்றி எழுதிய பயணம் அது.
தனது மெலிந்த தோற்றத்தால் அந்த படகில் தனது இடத்தை உருதிபடுத்திக்கொண்டவர் கமிலோ சியன்பியுகோஸ். சரியான் ஆயுத பயிற்சி பெறாததால் தலைவர் பிடல் காஸ்ட்ரோ கியூபா புறப்படும் தனது அணியில் கமிலோவிற்கு இடம் வழங்கவில்லை. பிடலை தொடர்ந்து நச்சரித்து தன்னையும் அந்த அணியில் எப்படியோ இணைத்துக்கொண்டார் கமிலோ, போராளிகளுக்கு உதவிக்காரராக செயல்படுவது அவரின் கடமை.
அவர்கள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை, இடம் தெரியாமல் சதுப்பு நிலப்பகுதியில் தரையிறங்கிய போராளிகளை சுற்றிவளைத்து தாக்கியது கியூப இராணுவம், 82 பேர் இருந்த அணியில் தப்பி பிழைத்தது 12 பேர் மட்டுமே, அதில் கமிலோவும் ஒருவர்.
தீவின் தென் பகுதியான சியரா மாஸ்த்ரா மலைகளில் தளம் அமைத்திருந்தனர் எஞ்சிய போராளிகள். ஆயுத பயிற்சியை முடிக்கும் முன்னரே களமுனைகளை கண்ட கமிலோ முழுமையான ஆயுத பயிற்சியை முடித்து சிறந்த போராளியாக தேறினார்.1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 300 பேர் மட்டுமே இருந்த புரட்சி படையை ஒழிக்க 12,000 இராணுவ வீரர்களை களமிறக்கி சியரா மாஸ்த்ரா மலைகளை முற்றுகையிட்டார் பாடிஸ்டா – வெரானொ இராணுவ நடவடிக்கை. 2 மாதங்கள் தொடர்ந்த மோதல்கள் அரசிற்கு பலன் ஏதும் தராமல் தோல்வியில் முடிந்தது.
வெரானொ நடவடிக்கையை முறியடிப்பதில் பெரும் பங்களிப்பை வழங்கிய காமிலோ தாக்குதல் தளபதியாக நிலை உயர்த்தப்பட்டார். வெரானொ நடவடிக்கை தோல்வியில் முடிந்து இரண்டு வாரங்களில் போராளிகள் தங்கள் வலிந்த தாக்குதலை தொடங்கினர்.
4 படைபிரிவுகளாக பிரிக்கப்பட்ட புரட்சி படையின் ஒரு படையணிக்கு காமிலோ தலைமை தாங்கினார். சேகுவாரா ஒரு படையணிக்கும், சுவான் அல்மைடா பாஸ்கே ஒரு படையணிக்கும், பிடல் காஸ்ட்ரோ ஒரு படையணிக்கும் தலைமையேற்றனர்.
சியாரா மாஸ்த்ரா மலைகளை அன்மித்திருந்த இராணுவ நிலைகள் மீது காஸ்ட்ரோவின் படையணி தாக்குதல் தொடுத்தது.இராணுவ தந்திரங்களை சிறந்து கையாளும் கமிலோ விரைவாக யகுவாகே படை தங்ககத்தை கைப்பற்றினார். சாண்டா கிளாரா நகரில் போரிட்டுக்கொண்டிருந்த சேகுவாராவின் படையணிக்கு உதவியாக தனது படையணியை நகர்த்தி வெற்றியை உறுதி செய்தார்.
போராளிகளின் வெற்றியை அறிந்து 1959, சனவரி 1 ம் நாள் சர்வாதிகாரி பாடிஸ்டா நாட்டை விட்டு தப்பி ஓடினார், புரட்சி வெற்றியடைந்தது, சனவரி 2 ம் தேதி கமிலோவின் தலைமையில் புரட்சி படை தலைநகர் ஹவானாவுக்குள் நுழைந்தது.
கொலம்பியா கோட்டையை கைப்பற்றி அங்கிருந்த இராணுவ வீரர்களை சிறை பிடித்தார் காமிலோ. ஹவானா அவர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
3 வருடங்களுக்கு முன்பு தனது படையில் அவரை சேர்ப்பதற்கு யோசித்த தலைவர் பிடல் காஸ்ட்ரோ, ஹவானா நகருக்குள் நுழைவதற்கு காமிலோவின் அனுமதிக்காக காத்திருந்தார். காமிலோவின் அனுமதிகிடைத்த பின்பே ஏனைய தலைவர்கள் வெற்றியை அறிவித்தவாறு உள்ளே நுழைந்தனர்.
போராளிகள் மீதும் மிகுந்த அக்கறையும் பாசமும் கொண்டவர் காமிலோ. பிடிப்பட்ட எதிரியிடமும் கண்ணியமாக நடந்து கொள்வார். மக்கள் அவரை “Gentleman of vanguard ” என்றும் கியூபாவின் நெப்போலியன் என்றும் அழைத்தனர்.
புரட்சிக்கு பின்பு கியூபா இராணுவத்தின் முதன்மை தளபதியாக பதவி வகித்தார், நில பங்கீட்டு நடவடிக்கைகளிலும் அதிகம் பங்காற்றினார் காமிலோ. கியூபாவின் இராண்டாவது பெரிய தலைவராக காமிலோ கருதபபட்டார், இவருக்கு அடுத்த நிலையில் சே குவாராவும், அதற்கடுத்து ராவுல் காஸ்ட்ரோவும் இருந்தனர்.
அக்டோபர் 28, 1959 ஆம் ஆண்டு கெமாகுவே நகரிலிருந்து தலைநகருக்கு தனது விமானத்தில் புறப்பட்ட காமிலோ ஹவானாவுக்கு சென்று சேரவே இல்லை. கரீபியன் கடலின் மீது பறந்துகொண்டிருந்த போது விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது, எந்த தடயமும் கிடைக்கவில்லை. தனது 27 ஆம் அகவையில் மறைந்துபோனார் காமிலோ.
இவர் மறைந்த அக்டோபர் 28 அன்று பள்ளி சிறுவர்களும் மக்களும் இவருக்காக கடலில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தவது வழக்கம்.
கல்லூரி காலங்களில் அரசுக்கு எதிராக பல போராட்டங்களில் பங்குபெற்று காலில் குண்டடியும் வாங்கியிருந்தார் . கியுப புரட்சி என்றவுடன் காஸ்ட்ரோ சகோதரர்களும், சே குவாராவும் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். போராளிகளின் உதவியாளராக சேர்த்துக்கொள்ளப்பட்டு தனது அற்பணிப்பாலும் அசாத்திய திறமையாலும் அந்நாட்டு இராணுவத்தின் முதன்மை தளபதியாய் உயர்ந்த இவரை பெரும்பாலோருக்கு தெரியாது – தளபதி காமிலோ சியன்பியுகோஸ் கொரரியன்.
” Few men have succeeded in leaving on every action such a distinctive personal mark. He had the natural intelligence of the people, who had chosen him out of thousands for a privileged position on account of the audacity of his blows, his tenacity, his intelligence, and unequalled devotion. Camilo practiced loyalty like a religion”.
– Che Guevara