பிரபல மக்கள் தொடர்பாளரும், தமிழ் சினிமாவின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாக திகழ்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88 அவரின் மரணம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், 1928ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது இயர் பெயர் மணி. பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதுவே அவரது கலை ஆர்வத்திற்கு வித்தாக அமைந்தது.
அதுமட்டுமல்ல சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். பாக்ஸ் கேமிராவில் தனது யுக்தியால் இரட்டைவேடப்படம் எடுத்தார். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை அவருக்கு முறைப்படி இன்னும் நேர்த்தியாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.
1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிப் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தார். அவரது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் அவர் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் வெறும் ஆனந்தனாக இருந்தவர் பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினார்.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில், சினிமா தொடர்பான அனைத்து புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். அன்றைய ஊமை படங்கள் தொடங்கி இன்று வெளியாகியுள்ள, நாளை வெளியாக போகும் படங்கள் வரை அப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் துல்லியமாக வைத்திருந்தார்.
திரைப்படத் துறையில் முதன்முதலாக மக்கள் தொடர்புப் பணியில் இருந்த இவரிடம் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இதனாலேயே இவரை நடமாடும் என்சைக்ளோபீடியா என்று பலரும் அழைப்பார்கள்.
மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனின் உடல், சென்னை, மகாலிங்கபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த், சரத்குமார், ராதிகா, நடிகர் சங்கம் சார்பில் நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.