நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கடன் சுமை இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கெரடாவுமான அநுரகுமார திசாநாயக்க நேற்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிறந்த குழந்தை முதல் சுகவீனமுற்றிருக்கும் முதியோருக்கும் இந்தக் கடன்சுமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டுக்கு 9500 பில்லியன் ரூபா கடன்சுமை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 10500 பில்லியன் ரூபாக்களாக அதிகரிக்கலாம் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
கடந்த அரசாங்கம் கூடுதலான கடன்களைப் பெற்றுவிட்டது. பல கடன்கள் தற்பொழுதே தெரியவருகிறது என அரசாங்கம் கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தக் கடன்களை எவ்வாறு செலுத்துவது என்று அரசு தீர்மானிக்க வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடன் சுமையில் 40 வீதத்தை நாட்டு மக்கள் செலுத்த முடியாது. ஏனெனில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்ற கடன்களுக்கான ‘கொமிஷன்’, மோசடி, திருட்டு, லஞ்சம் என 40 வீதம் பெறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4000 பில்லியன் ரூபா இவ்வாறு மோசடியாகப் பெறப்பட்ட பணம்.
இந்தப் பணத்தை நாட்டு மக்களிடமிருந்து அறவிடமுடியாது. கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்களிடமிருந்தே இப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதேநேரம், 2016ஆம் ஆண்டு 5.3 பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் எதிர்வுகூறியுள்ளது.