தமிழகத்தின், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், ஏப்ரல் 22ஆம் திகதி தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், இந்தத் திகதியிலிருந்து தொடங்கிவிட வேண்டும். அதுதான் கடந்த காலத் தேர்தல் களத்தின் சிறப்பம்சம். அரசியல் கட்சிகள், பெரும்பாலும் ‘தனிப்பட்ட தாக்குதலை’ தவிர்த்தே வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க-மக்கள்நலக்கூட்டணித் தலைவர்களாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, அனைவருமே ‘தனிப்பட்ட தாக்குதலை’த் தொடுக்கவில்லை.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மட்டும், கருணாநிதி மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்தார். அது தவறு என்பதை புரிந்து கொண்டு, உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். அதனால் ‘நாகரிகமான தேர்தல் பிரசாரத்தை’ யொட்டி, தமிழக தேர்தல் களம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
கூட்டணி வைக்க வேண்டியவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். கூட்டணி வைக்க முடியாது என்று எதிர்பார்த்தவர்கள் சேர்ந்து நிற்கிறார்கள், இது இந்தத் தேர்தல் களத்தின் தனிச் சிறப்பு. இருந்தாலும், இந்தத் தேர்தலில், தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை ‘சூப்பர் ஹீரோ’ என்று அனைவரும் பேசினாலும், இந்த ஒட்டு மொத்தத் தேர்தல் தந்திரத்தின் ‘சூப்பர் ஹீரோ’ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். தந்தை பெரியாரின் வாரிசான இளங்கோவன் ‘தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிதான் இயற்கை கூட்டணி’ என்பதை எடுத்த எடுப்பிலேயே உணர்ந்து, அ.தி.மு.க மீதான தனது தாக்குதலைத் தொடுத்தார்.
விளைவு, தி.மு.கவுடனான தொகுதிப் பங்கீட்டில் யாரும் எதிர்பாராத வண்ணம் 41 சட்டமன்றத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றிருக்கிறார். 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மூப்பனார், அ.தி.மு.கவுடன் கூட்டணி பேசிய போது கூட, காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்கள்தான் கிடைத்தன. இப்படி 41 இடங்கள் கிடைக்கவில்லை. அந்தவகையில் இந்த தேர்தலின் ‘ஜாக்பாட்’ காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்திருக்கிறது.
அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ‘இரட்டை இலை’ச் சின்னத்தைப் பிரபலப்படுத்தியிருக்கிறது. இது, இந்தச் சட்டமன்றத் தேர்தலின் வித்தியாசமான வியூகம். பல முனைப் போட்டியில், கட்சியின் சார்பில் போட்டியிடும் இடங்கள் அதிகம் இருந்தால், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் பெற்ற விட முடியும் என்பது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கணிப்பு. அதன் அடிப்படையிலேயே இந்தவியூகத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.
தி.மு.கவும் அதே கணக்கில்தான் 170க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. களத்தில் ஐந்து கூட்டணிகள் நிற்கின்றன. அ.தி.மு.க ஓர் அணி. தி.மு.க இன்னோர் அணி. இரண்டும் பிரதான அணிகள். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்கிறார்கள். விமர்சித்துக் கொள்கிறார்கள். வேறு கட்சிகளை இவர்கள் விமர்சிப்பதில்லை. தமிழக தேர்தல்க் களம் ‘திமுக- அ.தி.மு.க’ ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள போட்டியாகவே இருக்கட்டும் என்று வியூகத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க வின் சார்பில் அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 15ஆம் திகதி மதுரையில் பிரசாரத்தை தொடங்கி, முதல் கட்டத்தை காஞ்சிபுரத்தில் 22ஆம் திகதி முடித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் அவர், அ.தி.மு.கவைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் விமர்சிக்கவில்லை. அதேபோல் முதல்வர் ஜெயலலிதா, சென்னை தீவுத் திடலில் ஏப்ரல் 10ஆம் திகதி தொடங்கி, காஞ்சிபுரம், தர்மபுரி, அருப்புக்கோட்டை ஆகிய பிரசாரங்களை முடித்துள்ளார். அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதியை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மு.க. ஸ்டாலினுக்கு இதுவரை பதில் சொல்லவில்லை. அவரைக் குறை கூறிப் பேசவும் இல்லை. ‘தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுக்கும்’ இடையில்மட்டுமே போட்டி என்பதை வலியுறுத்தும் அதே நேரத்தில், களத்தை ‘ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும்’ இடையேயான போட்டியாகவும் கொண்டு செல்லவேண்டும் என்பது, அ.தி.மு.கவின் வியூகமாக இருக்கிறது.
ஆகவே, இந்த இரு கட்சிகளுக்குள்ளும் ‘உனக்கு நான் போட்டி. எனக்கு நீ போட்டி’ என்ற அடிப்படையில்தான், களத்தில் நின்று காரசாரமாகப் பேசிக் கொள்கிறார்கள். குறிப்பாக, மக்கள்நலக்கூட்டணியினர் தி.மு.கவை கடுமையாக விமர்சித்தாலும் அதற்கு தி.மு.க பதில் சொல்வதில்லை. பாட்டாளி மக்கள் கட்சி விமர்சித்தாலும் பதில் கூறுவதில்லை. ‘முதல்வரை சந்திக்க முடியவில்லை’ ‘இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்தஅரசு, தமிழ்நாடு அரசுதான்’ என்றெல்லாம் பா.ஜ.கவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா தாக்கிப் பேசினாலும், அதற்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதில் சொல்வதில்லை.
பாரதிய ஜனதாக் கட்சி ஓர் அணி. தே.மு.தி.க – மக்கள் நலக்கூட்டணி இன்னொரு அணி. இரண்டும் மாற்றம் வேண்டும் என்று மக்களிடம் சென்று கொண்டிருக்கும் அணிகள். இவர்களில் தே.மு.தி.க – மக்கள்நலக் கூட்டணியினர், தி.மு.கவைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். குறிப்பாக அந்த அணியில் உள்ள வைகோ, (ம.தி.மு.க) பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.) முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர், தி.மு.க தலைவர் கருணாநிதியையும் பொருளாளர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாகக் குறை கூறுகிறார்கள். ஆனால், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், கொள்கை ரீதியாக மட்டும் தி.மு.கவை கடுமையாக விமர்சிக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ‘அ.தி.மு.க, தி.மு.க இரு கட்சிகளையும் தேர்தல் பிரசாரத்துக்குத் தேவைப்படும் எல்லைக்கு அப்பால்’ சென்று விமர்சிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகரில் பிரபல கல்வியாளர் வசந்த தேவியை நிறுத்தியிருக்கும் திருமாவளவன், தான் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிலேயே தி.மு.கவையும், அ.தி.மு.கவையும் ‘நாகரிக எல்லைக் கோட்டுக்குள்’ நின்று விமர்சித்து வரும் ஒரே தலைவர் திருமாவளவன்தான். தமிழக அரசியல் வரலாற்றில் நல்லதொரு பிரசார முறைக்கு இது ஒரு தொடக்கம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தமட்டில் ‘தங்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கவில்லை’ என்ற கோபம் இருக்கிறது. அது, மத்திய அமைச்சர்களின் பேச்சுகளில் எதிரொலிக்கிறது. தேர்தல் அறிக்கைவெளியிட்டுள்ள பா.ஜ.க ‘மதமாற்ற தடைச் சட்டம்’ ‘பழங்குடியினர் துறை உருவாக்குவோம்’ ‘பசுவதைச் சட்டம் அமுல்படுத்தப்படும்’ ‘வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு’ உள்ளிட்ட தமிழகத்தின் இயற்கையான அரசியலுக்கு மாறாக ‘வாக்குறுதிகளை’ வழங்கியிருக்கிறது.
ஆனாலும், அ.தி.மு.கவை முழு மூச்சாக எதிர்ப்பதில், அக்கட்சியிலுள்ள வேறு சில தலைவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். உதாரணமாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் போன்றோர் அ.தி.மு.கவை தர்மசங்கடப்படுத்த விரும்பவில்லை. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருக்கும் வெங்கய்யா நாயுடு, எதிர்காலத்தில் முக்கிய மசோதாக்களுக்காக அ.தி.மு.கவுடன் பேசவேண்டிய சூழ்நிலை வரும் என்பதை அவர் உணருகிறார். அதனால், மற்ற மத்திய அமைச்சர்கள் விமர்சிப்பது போல் தானும் அ.தி.மு.கவை விமர்சித்து அக்கட்சியுடனனான எதிர்கால உறவைக் கெடுத்துக் கொள்ளவேண்டாம் என்றுகருதுகிறார்.
ஆனால், வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீத்தாராமன், ஏன் பா.ஜ.கவுக்காகப் பேச தயங்குகிறார் என்பது புரியவில்லை என்றே மாநில பா.ஜ.க தலைவர்கள் கூறுகிறார்கள். பா.ஜ.கவின் தாக்குதல், தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகள்மீது இருந்தாலும் அ.தி.மு.க மீதான தாக்குதலில் வேகம் தெரிகிறது. ஆனால், அ.தி.மு.க மீது பா.ஜ.க தொடுக்கும் தாக்குதலை ஆமோதிக்க தி.மு.க இன்னும் தயாராகவில்லை.
‘அ.தி.மு.கவுக்கும், பா.ஜ.கவுக்கும் சண்டை’ என்ற தோற்றத்தை தி.மு.க பூதாகரமாக்கினால், தங்கள் கட்சிக்கு வரும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியில் சேதாரம் வரலாம் என்று கருதுகிறது. ஆகவே, தி.மு.க தனியாக அ.தி.மு.கவை விமர்சிக்கிறதே தவிர, பா.ஜ.கவின் பின்னால் நின்று விமர்சிக்கத் தயாராக இல்லை.
இதில் பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.கவை விட தி.மு.க மீதே அதிக தாக்குதலைத் தொடுக்கிறது. அந்தக் கட்சிக்கு ‘வடமாவட்டங்களில் தி.மு.கவுக்கு மாற்று’ என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தில் ‘அ.தி.மு.க – தி.மு.கவுக்கு மாற்று’ என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும். போதாக்குறைக்கு ‘அ.தி.மு.க- தி.மு.கவை நாங்கள்தான் ஜெயிக்க முடியும். மக்கள் நலக்கூட்டணியால் முடியாது’ என்ற தோற்றத்தைக் கொடுக்க வேண்டும். இப்படிப் பல தோற்றங்களை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, அனைத்து அணிகளையுமே (பா.ஜ.க அணியைத் தவிர) விமர்சனம் செய்கிறது.
இப்போதைக்கு பா.ஜ.க, தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டன. சற்று வித்தியாசமாக அ.தி.மு.க மட்டும் ‘தேர்தல் அறிக்கை’ வெளியிடாமல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டது. தி.மு,.க.வின் தேர்தல் அறிக்கைக்கு சரியான போட்டி என்று கருதக்கூடிய ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட அந்தக் கட்சி முயற்சித்து வருகிறது என்றே தெரிகிறது. ஆக மொத்தம் ‘வெளிச்சத்துக்கு வராத வியூகங்கள், நாகரிகமான விமர்சனங்கள்’ என்ற பாதையில் இப்போதைக்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் பயணித்துக் கொண்டிருக்கிறது மிக மிக ஆறுதலான தேர்தல் பிரசாரம.!
(எம். காசிநாதன்)