பற்குணம் அவர்கள் பயிற்சிகாலத்தில் வாழைச்சேனையில் பணியாற்றினார்.ஒரு இளைஞர் ஒருவர் அதுவும் தமிழர் புதிதாக நிர்வாக சேவையில் சேர்ந்து தன் தொகுதியில் பணியாற்றுவதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை பற்குணத்தை தானாகவே நேரில் வந்து சந்தித்து வாழ்த்தினார்.இது பற்குணத்துக்கு அதிரச்சியாகவும் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.ஏனெனில் அவர் ஒரு மக்கள் பிரதிநிதி.அவர் போய் சந்திக்க வேண்டிய ஒருவர் தன்னை வந்து பார்த்து வாழ்த்தி வரவேற்றது கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.இதை அவரிடமே நேரில் சொன்னார்.இனிமேல் தேவை எனில் அழையுங்கள் நானே வருவேன் என்றார்.ஆனாலும் மீண்டும் சில தடவை அழைக்காமலே இராசதுரை வந்து பார்த்தார்.கொள்கை முரண்பாடு இருந்தபோதும் இராசதுரையின் இந்த பண்பு பற்குணத்துக்கு பிடித்திருந்தது .இராஜன் செல்வநாயகம் கவனிக்கவே இல்லை.
பற்குணத்துக்கு அன்று உதவி அரசாங்க அதிபராக பணியாற்றிய புலிகளின் கண்ணிவெடியில் கொல்லப்பட்ட அந்தோனிமுத்து அறிமுகமானார்.அவரிடம் தான் இந்த பதவியைத் தேர்ந்த நோக்கத்தைக் கூறினார்.அவர் இப்படியான எண்ணம் கொண்ட நீ யாழ்ப்பாணம் போய் என்ன பண்ணமுடியும்.உன் போன்றவர்களுக்கு அங்கே தேவையே இல்லை.நீ குச்சவெளி என்னும் இடம் இருக்கிறது.அங்கே போ.அதுதான் உனக்குப் பொருத்தமான இடம் என கூறினார்.
அவரின் ஆலோசனைப்படி குச்சவெளியைத் தேர்ந்தெடுத்தார் .அவருடைய நண்பர் டிவகலாலா வும் திருகோணமலையைத் தெரிவு செய்தார்.அவர் நில அபிவிருத்தி ஆணையாளர் பதவியை தெரிவு செய்தார்.
குச்சவெளி ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டது.மூன்று நிலப்பரப்பாக நீரால் (ஆறுகளால்) பிரிக்கப்பட்டது.நிலாவெளி,இறக்கண்டி,கும்புறுப்பிட்டி ஒரு நிலப்பரப்பு .இரணைக்கேணி,குச்சவெளி,திரியாய் இரண்டாவது நிலப்பரப்பு,மூன்றாவது புல்மோட்டை,தென்னமரவாடி ,பறண மதவாச்சி ஆகியவை.
ஒவ்வொரு நிலப்பரப்பையும் இழுவைப் பாதை மூலமே கடக்க வேண்டும்.மழை காலங்களில் போக்குவரத்து தடைப்படும்.கடலை அண்டிய பகுதிகள் என்பதால் ஆறுகளைக் கடப்பது ஆபத்தானது.இது நிலாவெளி பொலிஸ் பிரிவைச் சேர்ந்திருந்தது .
இந்தப் பிரதேசத்தை மிகவும் விருப்பத்துடன் தெரிவு செய்தார்.இதைப் பொறுப்பெடுக்கப் போகும்போது அய்யா,அம்மாவையும் அழைத்தார்.வீட்டிலுள்ள சூழ்நிலைகள் வளங்கள் சீர்செய்யப்படாததால் போகமுடியவில்லை.
பற்குணம் தனியாகவே போனார்அவருக்கு ஜீப் மற்றும் டிரைவராக அப்புகாமி என்பவர் நியமிக்கப்பட்டார்.அவரும் ஒரு இளைஞர்..அந்த அலுவலகத்தில் அதிகமான மக்கள் தங்கள் தேவைகளுக்காக காத்திருந்தனர்.அவர் அலுவலகத்தில் நுழையாமல் வாசலில் நிற்க பியூன் தம்பிராசா என்பவர் வந்து என்ன என்று கேட்டார்.
இவர் என் பெயர் பற்குணம். நான்தான் புதிய டி.ஆர்.ஓ என்றார்.அவரோ நம்பமுடியாமல் உள்ளே போய் ஒரு பெடியன் தான்தான் புது டி.ஆர.ஓ என வந்து நிற்கிறான் என சொல்ல உடனே தலைமைக் கிளாக், ஓடிவந்து வரவேற்றார்.
குச்சவெளி டி.ஆர.ஓ வாக பொறுப்பேற்றதன் முலம் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வரலாற்றை மாற்றிய பெயர் பற்குணத்துக்கு உரியதானது.அதற்கான பாதை அமைத்துக்கொடுத்த எங்கள் அய்யாவும் அந்த வரலாற்றின் சொந்தக்காரர்.
வறுமை எதிரத்துப் போராடினால் வெற்றிபெற முடியும்.
அண்ணன் எனக்கு அடிக்கடி நினைவூட்டும் பாடல்
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.உழைக்காமல் தடைகளை உடைக்க முடியாது.
(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)