பற்குணம் டி.ஆர.ஓ (பதிவு 21)

அய்யா திரும்பி வந்து ஓரிரு மாதங்களின் பின் நான் ,அம்மா,எனது நாலாவது அண்ணன் இரத்தினசிங்கம் ஆகியோரும் குச்சவெளி பயணமானோம். நான் குழந்தையாக இருக்கும்போது பற்குணம் பல்கலைக்கழகம் போய்விட்டார்.இதனால் நான் அவரோடு இருந்த நாட்கள் குறைவு.ஆனாலும் அவருக்கும் எனக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானதாகவே இருந்தது.என்னுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றும் அண்ணனாக இருந்தார்.அவரின் குறும்புகள் எனக்கும் அவருக்கும் இடையில் வாடா போடா வாரத்தைப் பிரயோகங்கள் பாவிப்பேன்.அம்மா அய்யா மற்ற அண்ணன்மார்கள் கண்டித்தாலும் நான் டா போட்டுக் கதைப்பதையே விரும்பினார்.மற்றவரகள் கண்டிப்பதையும் தடுத்தார்.

நாங்கள் திருகோணமலையில் இறங்கியபோது பஸ்நிலையத்தில் எங்களை வரவேற்க காத்திருந்தார்.அவருடைய சாரதியாக கருணதாஸ என்ற பெரியவர் இருந்தார்.இதுவே எங்கள் முதலாவதும் நீண்டதார பயணமும் ஆகும்.

அம்மா அன்றே சமையல் செய்வோம் என்று சொன்னதால் சமையல் பாத்திரங்கள் படுக்க பாய்கள் என எல்லாம் வாங்கிக்கொண்டு குச்சவெளி பயணமானோம்.அன்றுதான் சலப்பை ஆற்றில் இழுவைப் பாதையைக் கண்டோம்.அந்தப் பயணத்தில்தான் ஆறுகள் மலைகள் என்பவற்றையும் முதல்முதலாகப் பார்த்தோம்.கடலும் அப்போதுதான் விசித்திரமாக நான் பார்த்தேன்.இழுவைப்பாதை மூலமாக ஆற்றைக்கடந்து குச்சவெளிக்கு அண்ணனின் அரச பங்களாவுக்கு நுழைந்தோம்.

வெறும் ஓலைக்குடிசைக்குள் வாழ்ந்த எங்களுக்கு அந்த பிரமாண்டமான வீடு அஅதியமான் இருந்தது.அதுவும் கடற்கரையோடு அண்மித்து அழகாக இருந்தது.ஆனால் கடல் தெரியவில்லை.அந்த வீட்டுக்குள் சிறுவனான நான் எல்லாத் திசைகளிலும் ஓடினேன்.பைப்,தண்ணீர் தாங்கி தொட்டி ,குளியலறை எல்லாமே எமக்குப் புதியவை.

அம்மா மகனுக்கு சமைக்கும் ஆவலில் களைப்பை மறந்து குசினியை தேடினார்.நான் பற்குணத்திடம் கடல் பார்க்க அடம்பிடித்தேன்.அண்ணன் அம்மாவைக் கவனிக்க வேண்டும் என்பதால் எனது அண்ணன் இரத்தினசிங்கத்தோடு அனுப்பினார்.அவரும் அங்கே வந்ததும் வயதை மறந்து மணலில் உருண்டு விளையாடினார்.அந்த மணலில் உள்ள கற்கள் எம்மீது ஒட்டிக்கொண்டன.அது அசௌகரியமாக இருந்ததால் திரும்பிவந்து குளித்தோம்.அப்பவும் அவை போகவில்லை .மிகவும் கஷ்டம் தந்தன.ஓரிரு நாட்களில் அவை தானாக போய்விட்டன.

மறுநாள் என்னை பாடசாலையில் சேர்த்தார்.இப்பாடசாலையில் தமிழ் இஸ்லாமிய சிங்கள மாணவரகள் படித்தனர்.பாதி மாணவர்கள் இஸ்லாமியர்கள்.அதன் அதிபராக ஒரு இஸ்லாமியரே இருந்தார்.எனக்கு அது புது அனுபவமாக இருந்தது.

(அந்தப் பாடசாலை இப்போது தனி தமிழ் மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.இதன் மூலம் இரண்டு சமூகங்களுடையேயான இணைப்பு விடுபட்டுள்ள்து.எனக்கு இஸ்லாமிய மாணவரகளே அங்கே நண்பரகளாக இருந்தனர்.ஒரு மொழி மத்த்தால் பிளவுபட்டுள்ளது வேதனையானது.என் நெருங்கிய நண்பனாக முகமட் றபீக் என்பவர் இருந்தார்.என்னைவிட இரண்டு வகுப்பு அதிகம்.ஆனாலும் அவனோடு அதிகம் உலாவுவேன்)

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)