ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சக்திமிக்கதாக பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு,கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் காலியில் நடைபெறும் மேதினக் கூட்டத்திலும் பங்கு கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகள் கலந்து கொண்ட விஷேட கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வொன்றைக் காண்பது அவசியம் என்பதை வலியுறுத்தியதோடு,அதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதியின் மேதினக் கூட்டத்திற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டு,காலியில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கலந்து கொள்ளும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
(ஊடகப் பிரிவு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி)