மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பிப் பொடிகள் அடங்கிய பக்கெட்டுகள், கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் திங்கட்கிழமை (02) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பிப் பொடிகள் அடங்கிய பொதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, பாலமுனை -02 கிராமத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாலமுனைக் கிராமத்தில் திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர் மறைந்திருந்த வீட்டிலிருந்து 450 மில்லிகிராம் நிறையுடைய நான்கு ஹெரோயின் பக்கெட்டுகளும் 4,350 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சா மற்றும் கோப்பிப் கலந்த பொடி அடங்கிய பக்கெட்டும் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சந்தேக நபர் ஏற்கெனவே கஞ்சா மற்றும் கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு முறை கைதுசெய்யப்பட்டு வழக்கை எதிர்கொண்டு வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறிருக்க, திருகோணமலை, ரொட்டவௌக் கிராமத்தில் இரண்டு கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கிராமத்தில் அதிகளவான இளைஞர்கள் கஞ்சா பாவிப்பதாக சமூக அமைப்புகளிடமிருந்து ;தமக்கு தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரிடம் சோதனை மேற்கொண்டபோது, அவரிடம் கேரளா கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.